புதிய கலைத்திட்ட மாற்றத்தில் சாதாரண தரம் உயர் தரத்திற்கு என்ன நடக்கும்?
புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறை அல்லது சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டங்கள் மாற்றப்படாது என்று தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சாதாரண தரப் பரீட்சையில் சில மாற்றங்களைச் செய்வது குறித்து முன்னர் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்த சீர்திருத்தங்கள் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வராது என்றும், பரீட்சை முறை, பாடத்திட்டம் மற்றும் பாடங்களைப் புதுப்பிக்க கணிசமான நேரம் எடுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
புதிய உலகிற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சீர்திருத்தங்கள் ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டால், ஒரு பெரிய நெருக்கடி உருவாகக் கூடும் என்றும் அவர் கூறினார்.
பரீட்சைகள் அல்லது பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டால், மாணவர்கள் அதற்குத் தயாராக குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று மஞ்சுளா விதானபத்திரன கூறினார்.
அதன்படி, பாடத்திட்டம் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு தரம் 1 முதல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும், தற்போது 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எட்டு வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தைப் புதுப்பிக்கும் முறை வழக்கம் போல் தொடரும் என்றும் திருமதி விதானபத்திரண மேலும் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் கீழ், பாடத்திட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இதுவரை அது நடக்கவில்லை என்றும், சில மாணவர்களின் பாடங்கள் பத்து வருடங்களாக மாறவில்லை என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு ஒழுங்குபடுத்தப்பட்டு 2026 இல் செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தற்போதைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் 2033 ஆம் ஆண்டில் சாதாரண தர பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதுவரை, மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
