“தொண்டை வரண்டது… ஆனால் கற்றல் நிகழ்ந்ததா?
ஆசிரியர் வகிபாகம் குறித்த ஒரு பிரதிபலிப்பு”

S.Logarajah
Lecturer, Batticaloa National College of Education
அறிமுகம்
10 நாட்கள் துண்டக் கற்பித்தல் (Block Teaching Practice) பயிற்சி நிறைவடைந்த பின்பு, விரிவுரை மண்டபத்தில் ஆசிரிய மாணவர்களுடன் அனுபவப் பகிர்வு கலந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்தேன். இதன் நோக்கம், அவர்கள் கற்றல்–கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்து, தற்கால ஆசிரியர் வகிபாகம் குறித்த ஆழமான பிரதிபலிப்பு சிந்தனையை உருவாக்குவதாகும்.
அந்தக் கலந்துரையாடலில் பல ஆசிரிய மாணவர்கள் ஒரே கருத்தை வலியுறுத்தினர்:
“சேர், நீண்ட நேரம் கற்பித்ததால் தொண்டை வரண்டு போய்விட்டது…”
இந்த ஒரு வாக்கியம், அவர்கள் கற்பித்தல் அனுபவத்தின் உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தியது. அவர்கள் கற்றலை நிகழச் செய்யவில்லை; மாறாக, முழு பாடவேளையிலும் பேசும் “விளக்கமளிப்பவர்களாக” செயல்பட்டனர். இதுவே ஆசிரியர் மைய (Teacher-Centered) அணுகுமுறையின் தெளிவான சான்றாகும். மேலும், அவர்கள் தமது அனுபவத்தை பகிர்கையில் “படித்துக் கொடுத்தேன்”, “சொல்லிக் கொடுத்தேன்”, “படிப்பித்தேன்” போன்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தியதையும் அவதானித்தேன்.
கலந்துரையாடலில் வெளிப்பட்ட முக்கிய உண்மைகள்
- பாடவேளையின் பெரும்பகுதி ஆசிரியரின் பேச்சாக இருந்தது.
- மாணவர்கள் செயலில் ஈடுபட்ட நேரம் குறைந்தது.
- குரல் களைப்பு, உடல் சோர்வு ஏற்பட்டது.
- “பாடத்தை முழுமையாக கற்பிக்க வேண்டும்” என்ற அழுத்தம் காணப்பட்டது.
- மாணவர் மையக் கற்றல் குறித்த சரியான புரிதல் இல்லாமல் இருந்தது.
இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, நான் அவர்களிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன்:
“நாம் அதிகமாக பேசினால் தான் நல்ல கற்பித்தலா?”
இந்தக் கேள்வி அவர்களின் பிரதிபலிப்புச் சிந்தனையைத் தூண்டும் வகையில் கலந்துரையாடலை முன்னெடுத்தது.
கற்பித்தல் குறித்த சிந்தனை மாற்றம்
பழைய நம்பிக்கை:
- கற்பித்தல் = விளக்குதல் + சொல்லிக் கொடுத்தல் (Teaching = Telling)
- ஆசிரியர் அதிகம் பேச வேண்டும்
- அமைதியான வகுப்பு = நல்ல கற்றல்
நவீன கல்வியியல் உண்மை:
- கற்பித்தல் = கற்றலை நிகழச் செய்வதற்கான வழிகாட்டுதல்
- மாணவர்கள் செயலில் ஈடுபட வேண்டும்
- செயலில் ஈடுபட்ட வகுப்பு = சிறந்த கற்றல்
முக்கியத் தெளிவுபடுத்தல்
ஆசிரியர் “மேடையில் பேசுபவர்” (Sage on the Stage) அல்ல; ஆசிரியர் “பக்கத்தில் இருந்து வழிகாட்டுபவர்” (Guide on the Side) ஆக இருக்க வேண்டும். அதாவது, “நான் சொல்லுகிறேன் – நீங்கள் கேளுங்கள்”
என்ற அணுகுமுறையிலிருந்து, “நீங்கள் ஆராயுங்கள் – நான் வழிகாட்டுகிறேன்” என்ற அணுகுமுறைக்கு மாற வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் அமைதியான கேட்பவர்களாக அல்லாது செயலில் ஈடுபடும் கற்பவர்களாக மாறுவார்கள்.
நடைமுறை உதாரணம்
பாடம்: புவியியல்
தரம்: 06
பாட விடயம்: பாடசாலை அமைவிடம்
பழைய நடைமுறை (Teacher-Centred Approach)
பாடப்பகுதி:
- கிராம சேவகர் பிரிவு (GS Division)
- பிரதேச செயலக பிரிவு (DS Division)
- மாவட்டம் (District)
செயற்பாடு:
- ஆசிரியர் பலகையில் வரைபடம் வரைந்து 20–25 நிமிடங்கள் தொடர்ந்து விளக்குகிறார்
- நிர்வாகப் பிரிவுகளை ஒன்றன் பின் ஒன்றாக விவரிக்கிறார்
- மாணவர்கள் அமைதியாகக் கேட்டு குறிப்பெடுக்கிறார்கள்
பிரச்சினைகள்:
- மாணவர்கள் செயலில் ஈடுபடவில்லை
- தங்களது பாடசாலையுடன் கற்றலை தொடர்புபடுத்த முடியவில்லை
- கற்றல் “கேட்டறிதல்” மட்டத்தில் நின்றது
- ஆசிரியருக்கு களைப்பு, மாணவர்களுக்கு சோர்வு ஏற்பட்டது
மாற்று நடைமுறை
(Student-Centred – Guide on the Side)
படி 1: ஆர்வத் தூண்டல் (Motivation / Engagement)
ஆசிரியர் கேள்வி எழுப்புகிறார்:
“நாம் படிக்கும் இந்தப் பாடசாலை எந்த நிர்வாகப் பிரிவில் உள்ளது என்று யாருக்காவது தெரிகிறதா?”
மாணவர்கள் பல்வேறு பதில்களை முன்வைப்பதால், அவர்களில் ஆர்வமும் சிந்தனையும் உருவாகின்றன.
படி 2: குழு அமைத்தல் (Grouping)
- வகுப்பை 3–4 குழுக்களாகப் பிரித்தல்
- ஒவ்வொரு குழுவுக்கும்:
- பிரதேச வரைபடம்
- உள்ளூர் தகவல் அட்டைகள்
- Worksheet வழங்கல்
படி 3: செயற்பாட்டு கற்றல் (Active Task)
மாணவர்களுக்கு வழங்கப்படும் பணிக்குறிப்பு:
- உங்கள் பாடசாலை அமைந்துள்ள இடத்தை வரைபடத்தில் கண்டறியுங்கள்
- அது எந்த GS Division-ல் உள்ளது என்பதை பதிவு செய்யுங்கள்
- அது எந்த DS Division-க்கு உட்பட்டது என்பதை குறியிடுங்கள்
- அது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பதை கண்டறியுங்கள்
இங்கு மாணவர்கள் கலந்துரையாடி, ஆராய்ந்து, தகவலை இணைத்து கற்றலை கட்டியெழுப்புகின்றனர்.
படி 4: ஆசிரியரின் வகிபாகம் – Guide on the Side
ஆசிரியர் நேரடியாக பதில் சொல்லமாட்டார்; மாறாக வழிநடத்துவார்:
- “வரைபடத்தில் உங்கள் பாடசாலை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியுமா?”
- “GS Division பெயர் எந்த அட்டையில் உள்ளது?”
- “GS Division மற்றும் DS Division இடையேயான தொடர்பு என்ன?”
இதன் மூலம் ஆசிரியர் சிந்தனைக்கு வழிகாட்டுபவராக செயல்படுகிறார்.
படி 5: குழு முன்வைப்பு (Group Presentation)
ஒவ்வொரு குழுவும் தங்களது கண்டுபிடிப்பை பகிர்கின்றனர்:
- “எங்கள் பாடசாலை புளியந்தீவு GS Division-ல் உள்ளது.
- அது மண்முனை வடக்கு DS Division-க்கு உட்பட்டது.
- அது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது.”
இதன் மூலம் மாணவர்கள் தாங்களே கற்றறிந்த தகவலை வெளிப்படுத்துகின்றனர்.
படி 6: ஒருங்கிணைப்பு (Consolidation)
ஆசிரியர் மாணவர்கள் கூறிய தகவல்களை ஒருங்கிணைத்து, நிர்வாகப் பிரிவுகளின் அடுக்குத் தொடர்பை தெளிவுபடுத்துகிறார்:
GS Division → DS Division → District
இங்கு ஆசிரியர் இறுதியில் மட்டுமே சுருக்கமான விளக்கம் வழங்குகிறார்.
முடிவுரை
ஆசிரியர் நீண்ட நேரம் பேசும்போது, அவர் களைப்படைவார்; மாணவர்கள் சோர்வடைவார்கள். ஆசிரியர் வழிகாட்டுபவராக மாறும்போது, அவர் இலகுவாக இருப்பார்; மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக்கொள்வார்கள். எனவே, நவீன கற்பித்தலின் மையச் சிந்தனை: “நான் பாடத்தை கற்பிக்கவில்லை; அவர்கள் கற்றலை அனுபவிக்கச் செய்தேன்.” என்பதேயாகும். இதுவே உண்மையான
“Guide on the Side” ஆசிரியர் வகிபாகத்தின் சாரம்.
Reference List
Bruner, J. S. (1966). Toward a theory of instruction. Harvard University Press.
Dewey, J. (1938). Experience and education. Macmillan.
Freire, P. (1970). Pedagogy of the oppressed. Continuum.
King, A. (1993). From sage on the stage to guide on the side. College Teaching, 41(1), 30–35. https://doi.org/10.1080/87567555.1993.9926781
Kolb, D. A. (1984). Experiential learning: Experience as the source of learning and development. Prentice Hall.
Vygotsky, L. S. (1978). Mind in society: The development of higher psychological processes. Harvard University Press.
National Institute of Education. (2016). Teacher’s guide: Geography – Grade 6. Maharagama, Sri Lanka:
