“அதிக ரியூஷன் – அதிக வெற்றியா?”
இலங்கை கல்விச் சூழலில் நிழல் கல்வி: விமர்சன ஆய்வு

S.Logarajah
Lecturer, Batticaloa National College of Education
அறிமுகம்
இலங்கையில் 1945 முதல் நடைமுறையில் உள்ள இலவசக் கல்வி முறை உலகளவில் பாராட்டப்பட்ட சமூக நலக் கொள்கையாகும். எனினும், இதனுடன் இணைந்து “நிழல் கல்வி” (Shadow Education) எனப்படும் தனியார் ரியூஷன் அமைப்பு கடந்த தசாப்தங்களில் விரைவாக வளர்ந்து, கல்வி அமைப்பின் இணைச் சந்தையாக (parallel education market) உருவெடுத்துள்ளது (Bray, 1999; 2007).
ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குறிப்பாக இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களில் தனியார் ரியூஷன் பங்கேற்பு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன (Bray & Lykins, 2012). மேலும், குடும்ப வருவாய் மற்றும் செலவுக் கணக்கெடுப்புகளின் படி, இலங்கையில் கல்விச் செலவுகளின் ஒரு முக்கிய பகுதி தனியார் கற்றல் செலவுகளாக காணப்படுகிறது. இதனால், இலவசக் கல்வி இருந்தாலும் “மறை கல்விச் செலவு” (hidden cost of education) உருவாகியுள்ளது எனக் கூறலாம் (World Bank, 2018). இத்தகைய புள்ளிவிவரச் சான்றுகள், நிழல் கல்வி ஒரு துணை ஆதரவு மட்டுமல்லாமல், கல்வி அமைப்புடன் இணைந்து இயங்கும் சமூக–பொருளாதார அமைப்பாக மாறியுள்ளதைக் காட்டுகின்றன.
இலவசக் கல்வி உள்ள நாட்டில், ஏன் நிழல் கல்வி இவ்வளவு வலுவாக உள்ளது? என்ற கேள்வி இன்று இலங்கை கல்வி விவாதத்தின் மையமாக மாறியுள்ளது. கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டிய உரிமையாகக் கருதப்படும் நிலையில், ஏன் ரியூஷன் கலாசாரம் இவ்வளவு வலுப்பெற்றுள்ளது? “பாடசாலை வகுப்பறை போதுமானதாக இருந்தால், ரியூஷன் கலாசாரம் அவசியமா?” என்ற கேள்வியும் இதனுடன் இணைந்து எழுகிறது.
இக்கட்டுரை, இலங்கையின் கல்விச் சூழலுக்கேற்ப நிழல் கல்வியின் சாதக–பாதகங்களை விமர்சன நோக்கில் பகுப்பாய்வு செய்து, புதிய கல்வி சீர்திருத்தங்கள் இதற்கு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும், பெற்றோர் எதிர்பார்ப்புகள், செலவுச் சுமைகள், மற்றும் இலவசக் கல்வி முறைமைக்கு உண்டாகும் சவால்களை ஆராய்கிறது.
Bray (1999; 2007) நிழல் கல்வியை, பாடசாலைக் கல்வியை ஒட்டிய மேலதிக கற்றல் அமைப்பாக வரையறுக்கிறார். தனியார் ரியூஷன் வகுப்புகள், பரீட்சை மையப்படுத்தப்பட்ட பயிற்சி நிலையங்கள், மற்றும் ஒன்லைன் கோச்சிங் ஆகியவை இதன் முக்கிய வடிவங்களாகும். Bray மற்றும் Lykins (2012) ஆசிய நாடுகளில் நிழல் கல்வி, கல்வி சமத்துவம் மற்றும் கொள்கை திட்டமிடலுக்கான சவாலாக மாறிவருவதாகக் குறிப்பிடுகின்றனர். Little (2011) இலங்கையில் கல்வி அடைவு விரிவடைந்தாலும், தர மற்றும் சமத்துவ வேறுபாடுகள் தொடர்கின்றன எனக் குறிப்பிடுகிறார்.
இலங்கை கல்வி அமைப்பு பரீட்சை மையப்படுத்தப்பட்டதாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. O/L மற்றும் A/L பரீட்சைகள் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான முக்கிய நுழைவாயில்களாகக் கருதப்படுகின்றன. இத்தகைய பரீட்சை அழுத்தம் மாணவர்கள் மேலதிக பயிற்சிக்காக ரியூஷன் வகுப்புகளின் மீது சார்ந்திருக்க வழிவகுக்கிறது (World Bank, 2018).
மாணவர் குரல்
நிழல் கல்வியின் செல்லாக்கு, மாணவர்களின் மனப்பான்மையிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது. பல மாணவர்கள், “பாடசாலை பாடம் புரிந்தாலும், பரீட்சை வினாக்களை ரியூஷனில்தான் கற்றுக்கொள்கிறோம்” என்ற அனுபவத்தை பகிர்கின்றனர். மேலும், “ரியூஷன் செல்லவில்லை என்றால் நான் பின்தங்கிவிடுவேன்” என்ற பய உணர்வு பரவலாகக் காணப்படுகிறது. இது பரீட்சை மையப்படுத்தப்பட்ட கல்வி கலாசாரம் உருவாக்கும் உளவியல் அழுத்தத்தை (assessment-driven anxiety) வெளிப்படுத்துகிறது.
பெற்றோர் குரல்
பெற்றோர்கள் கல்வியை சமூக முன்னேற்றத்தின் முதலீடாகக் கருதுகின்றனர். பல பெற்றோர்கள், “பாடசாலை கற்றல் மட்டும் போதாது; ரியூஷன் அவசியம்” என்ற நம்பிக்கையுடன் செயற்படுகின்றனர். மேலும், “செலவு அதிகமாக இருந்தாலும் குழந்தையின் எதிர்காலத்திற்காக ரியூஷன் அவசியம்” என்ற மனப்பான்மை குடும்பங்களின் பொருளாதார முடிவுகளை நிர்ணயிக்கிறது. இது கல்வியை சமூக உயர்வு கருவியாகக் காணும் (education as social mobility investment) சமூக பொருளாதார அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
Little (2011) குறிப்பிடுவது போல், கல்வி அணுகல் விரிவடைந்தாலும் தர மற்றும் சமத்துவ வேறுபாடுகள் தொடர்கின்றன. பொருளாதார ரீதியாக வலுவான குடும்பங்களின் மாணவர்கள் அதிக அளவு தனியார் ரியூஷன் வாய்ப்புகளைப் பெறுகின்றனர்; இதனால் கல்விச் சாதனையில் சமூக-பொருளாதார இடைவெளி அதிகரிக்கிறது.
இதனால், “இலவசக் கல்வி அமைப்பின் உட்புறத்தில் உருவாகும் மறை சமத்துவமின்மை – அதுவே நிழல் கல்வி” என்ற கருத்து சமூக உண்மையை வெளிப்படுத்துகிறது. “நிழல் கல்வி வெற்றியை உறுதி செய்கிறதா, அல்லது போட்டியை மட்டுமே தீவிரப்படுத்துகிறதா?” என்ற கேள்வி இங்கு முக்கியமானதாகிறது.
நிழல் கல்வியின் சாதகங்கள் (Advantages)
- பரீட்சை தயார்படுத்தலில் உதவி: O/L, A/L போன்ற தேர்வுகளுக்கான மீளாய்வு மற்றும் மாதிரி வினாத்தாள்கள் மூலம் அதிக பயிற்சி.
- தனிப்பட்ட கற்றல் ஆதரவு: பலவீனமான மாணவர்களுக்கு கூடுதல் விளக்கம், சந்தேக நிவாரணம்.
- பயிற்சி மையப்படுத்தப்பட்ட கற்றல்: பாட உள்ளடக்கங்களை விரைவாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு.
- பாடசாலையில் கற்பிக்கப்படாத அல்லது முழுமையற்ற பாடப்பகுதிகளை புரிந்துகொள்ளும் வாய்ப்பு.
- பெற்றோர் நம்பிக்கை உயர்வு: கல்விச் சாதனையை உயர்த்தும் துணை அமைப்பாக கருதப்படுதல்.
இவ்வசதிகள் மாணவர்களின் குறுகிய கால கல்விச் சாதனையை (short term academic performance) மேம்படுத்துகின்றன என்பது பல ஆய்வுகளின் கருத்தாகும்.
நிழல் கல்வியின் பாதகங்கள் (Disadvantages)
- கட்டண அடிப்படையிலான ரியூஷன் காரணமாக கல்வி சமத்துவம் பாதிக்கப்படுதல் (Little, 2011).
- உயர்ந்த கட்டணங்களால் குறைந்த வருமானக் குடும்ப மாணவர்கள் பின்தங்கும் அபாயம்.
- மாணவர் உளவியல் அழுத்தம்: பாடசாலை + ரியூஷன் = நேரச் சுமை, சோர்வு.
- பாடசாலை கல்வியின் மதிப்பு குறைதல்.
- கல்வி வணிகமயமாதல்: கல்வி “சேவை” அல்ல, “சந்தை பொருள்” எனும் மனப்பான்மை உருவாகுதல் (Bray, 1999).
- கற்றல் ஆழம் குறைதல்: பரீட்சை மையப்படுத்தப்பட்ட உத்திகள் காரணமாக விமர்சன சிந்தனை பின்தள்ளப்படுதல் (Bray & Lykins, 2012).
கல்வி ஒரு அடிப்படை உரிமையாக இருக்க வேண்டிய நிலையில், நிழல் கல்வி அதை சந்தை பொருளாக மாற்றும் அபாயம் உருவாகிறது.
ஆசிரியர்கள் மற்றும் நெறிமுறை சிக்கல்
பாடசாலை ஆசிரியர்களே ரியூஷன் வழங்குநர்களாக இருப்பது கல்வி நெறிமுறை சிக்கலை உருவாக்குகிறது. இது “நலன்விரோதம்” (conflict of interest) என்ற பிரச்சினையை எழுப்புகிறது (Silva, 2010). சில ஆசிரியர்கள், வகுப்பறையில் நேரக் கட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் மேலதிக விளக்கத்திற்காக ரியூஷனை நாடுகின்றனர் என வாதிடுகின்றனர். இது தனிநபர் குறைபாடு அல்ல; மாறாக அமைப்புசார் கற்பித்தல் கட்டுப்பாடு என்பதை வெளிப்படுத்துகிறது.
சட்டரீதியான பரிமாணங்கள்
நிழல் கல்வி கட்டுப்பாடின்றி இயங்குவது கல்வி சமத்துவத்துக்கு சவாலாகும். எனவே,
- ஆசிரியர்கள் தங்களது சொந்த மாணவர்களுக்கு கட்டண ரியூஷன் வழங்குவதில் ஒழுங்குமுறை
- ரியூஷன் நிலைய பதிவு மற்றும் தரக் கட்டுப்பாடு
- மாணவர் பாதுகாப்பு மற்றும் நேர ஒழுங்கு வழிகாட்டுதல்கள்
- குழந்தை உரிமைகள் மற்றும் கல்விச் சுமை தொடர்பான சட்ட வழிகாட்டுதல்கள்
அமல்படுத்தப்பட வேண்டும்.
கொள்கை நடைமுறை எடுத்துக்காட்டுகள்
- பாடசாலை அடிப்படையிலான இலவச மேலதிக கற்றல் வகுப்புகள் (remedial programmes)
- ஆசிரியர் நெறிமுறை ஒழுங்குமுறை மற்றும் conflict of interest அறிவிப்பு
- ரியூஷன் மைய பதிவு மற்றும் தரக் கண்காணிப்பு
- தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறை
புதிய கல்வி சீர்திருத்தம் மற்றும் நிழல் கல்வியின் எதிர்காலம்
இலங்கையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆரம்பக் கல்விச் சீர்திருத்தங்கள் (Primary Education Reforms) பின்வரும் முக்கியக் கோட்பாடுகளை முன்னிறுத்துகின்றன (National Institute of Education, 2022):
- திறன்–அடிப்படையிலான கற்றல் (Competency-Based Learning)
- செயற்பாட்டு மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட கற்றல் (Child-Centred & Activity-Based Learning)
- தொடர்ச்சியான மதிப்பீடு (Continuous / Formative Assessment)
- மனநலம், சமூகத் திறன் மற்றும் முழுமை வளர்ச்சி (Holistic Development)
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சீர்திருத்தக் கட்டமைப்பு ஆவணங்களில்,
“கற்றல் என்பது பரீட்சை மையப்படுத்தப்பட்ட நினைவூட்டல் செயல்முறையாக அல்ல; திறன், சிந்தனை மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் தொடர்ச்சியான செயல்முறை” என வலியுறுத்தப்படுகிறது (Ministry of Education, 2023).
இந்தக் கோட்பாடு, நிழல் கல்வியின் பரீட்சை-மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்கு நேரடியான சவாலாக அமைகிறது.
தரம் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் மேல் வகுப்புகளுக்கும் விரிவாக்கப்பட்டால், நிழல் கல்வியின் நிலை பின்வரும் மூன்று முக்கிய வழிகளில் மாற்றமடையக்கூடும்.
(a) பரீட்சை மையப்படுத்தப்பட்ட கற்றல் குறையும் வாய்ப்பு
தொடர்ச்சியான மதிப்பீடு (formative assessment) வலுப்பெற்றால், ஒரே இறுதி பரீட்சையின் மீது இருக்கும் அழுத்தம் குறையும். இதனால், தேர்வு-மையப்படுத்தப்பட்ட ரியூஷன் தேவையும் இயல்பாகக் குறையக்கூடும். மாணவர்களின் கற்றல் முன்னேற்றம் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால், மாதிரி வினாத்தாள் பயிற்சிகளின் மீது மட்டுமே சார்ந்திருக்கும் கற்றல் கலாசாரம் மெல்லக் குறைய வாய்ப்பு உள்ளது.
(b) செயற்பாட்டு கற்றல் அதிகரிப்பு
புதிய கலைத்திட்டங்கள் செயற்பாட்டு கற்றல், குழு செயல்பாடுகள், திட்ட அடிப்படையிலான கற்றல் போன்றவற்றை முன்னிறுத்துகின்றன. இத்தகைய கற்றல் முறைகள் பெரும்பான்மை மாணவர்கள் கொண்ட ரியூஷன் நிலையங்களில் நடைமுறைப்படுத்துவது கடினம். எனவே, பாடசாலைக் கற்றலின் தரம் உயர்ந்தால், நிழல் கல்வியின் அவசியம் குறையக்கூடும். இதனால் வகுப்பறை கற்றலின் மையத்துவம் (centrality of classroom learning) மீண்டும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
(c) ஆனால், போட்டித் பரீட்சைக் கலாசாரம் நீடித்தால்?
எனினும், O/L மற்றும் A/L பரீட்சைகள் இன்னும் உயர்கல்வி அணுகலுக்கான முக்கிய மதிப்பீட்டு அளவுகோல்களாகத் தொடர்ந்தால், நிழல் கல்வி முற்றிலும் குறையும் என்று கூற முடியாது. மாறாக, அது புதிய வடிவங்களில் மாற்றமடைந்து தொடரக்கூடும். உதாரணமாக:
- பரீட்சை தயார்படுத்தல் நிலையங்களிலிருந்து திறன் வளர்ப்பு மையங்களாக மாற்றம்.
- நிகழ்நிலை (online) கற்றல் தளங்களின் முக்கியத்துவம் அதிகரித்தல்.
- தனிப்பட்ட கற்றல் ஆதரவு (personalized tutoring) சேவைகள் விரிவடைதல்
இதனால், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டாலும், நிழல் கல்வி முற்றிலும் மறைந்து போகாது; அதன் வடிவம் மற்றும் நோக்கம் மாற்றமடையும் என்பதே நியாயமான கல்வியியல் முன்னறிவு ஆகும்.
அதனால், நிழல் கல்வியின் எதிர்காலத்தை “குறைதல்” என்ற கோணத்தில் அல்லாது, “மாற்றமடைதல்” (transformation) என்ற கோணத்தில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
முடிவுரை
முடிவாக, நிழல் கல்வி இலங்கை கல்விச் சூழலில் மறுக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்தாலும், அது வெற்றியின் ஒரே பாதை அல்ல. “அதிக ரியூஷன் – அதிக வெற்றி” என்பது ஒரு கல்வி மாயை மட்டுமே. உண்மையான வெற்றி தரமான கற்றல் அனுபவம், சிந்தனைத் திறன் வளர்ச்சி, மற்றும் சமநிலையான கல்விச் சூழல் ஆகியவற்றின் மூலம் உருவாகிறது (Bray, 1999; Little, 2011).
எனவே, கல்விச் சமத்துவத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், நிழல் கல்வியின் அவசியத்தை குறைக்கும் வகையில் வகுப்பறை கற்றல் தரத்தை வலுப்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
உசாத்துணை (References)
Bray, M. (1999). The shadow education system: Private tutoring and its implications for planners. UNESCO International Institute for Educational Planning.
Bray, M. (2007). The shadow education system: Private tutoring and its implications for planners (2nd ed.). UNESCO.
Bray, M., & Lykins, C. (2012). Shadow education: Private supplementary tutoring and its implications for policy makers in Asia. Asian Development Bank.
Ministry of Education, Sri Lanka. (2023). Education reforms for general education in Sri Lanka: Conceptual framework. Colombo: Ministry of Education.
National Institute of Education. (2022). Curriculum reforms and competency-based education in Sri Lanka. Maharagama: NIE.
Little, A. W. (2011). Access to education revisited: Equity, quality and policy in Sri Lanka. CREATE Pathways to Access Research Monograph.
Aturupane, H., Savchenko, Y., Shojo, M., & Larsen, B. (2014). Sri Lanka: Investment in human capital. World Bank.
World Bank. (2018). Sri Lanka education sector assessment: Achievements, challenges, and policy options. Washington, DC: World Bank.
Silva, K. T. (2010). Educational reforms and inequalities in Sri Lanka. Colombo: Social Scientists’ Association.
UNESCO. (2014). Education for All 2000–2015: Sri Lanka country report. Paris: UNESCO.
