தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு: 2026 இல் அறிமுகம்
இலங்கை கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் “தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பு” ஒன்றை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டில் முழுமையாகச் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அண்மையில் (02) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்த புதிய தரவு முகாமைத்துவ அமைப்பு, 2026 இல் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் ஒரு அங்கமாக அமையும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் மூலம், மாணவர்களைப் பாடசாலைகளில் சேர்ப்பதை எளிதாக்குதல், ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து நியமனங்களை வழங்குதல், பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்களை முறைப்படுத்துதல், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறையைத் திறம்பட செயல்படுத்துதல் மற்றும் பாடசாலைகளின் பௌதீக வளங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நிர்வாகச் செயற்பாடுகள் இலகுவாக்கப்படும் என்று அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளின் தேசிய பிறப்புச் சான்றிதழ்கள், பரீட்சை பெறுபேறுகள், தனிப்பட்ட திறன்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தரவுகளையும் உள்ளடக்கவும், பாடசாலை கட்டமைப்பில் இணையும் ஒவ்வொரு மாணவருக்கும் பிரத்தியேகமான தரவுக் கோப்பு ஒன்றைத் தயாரித்து, தனித்துவமான அடையாள அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, எதிர்வரும் ஆண்டு முதல் முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் இணையும் மாணவர்களிடமிருந்து இந்தத் தரவு சேகரிப்பு முறையை ஆரம்பிப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்த தேசிய கல்வித் தரவு முகாமைத்துவ அமைப்பை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப உதவிகளை இலங்கை விமானப்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னெடுப்பு, நாட்டின் கல்வி நிர்வாகத்தை நவீனமயப்படுத்தி, வினைத்திறனை அதிகரிப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
