ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம்

ஆங்கில மொழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க தீர்மானம்

கொழும்பு: நாட்டில் தற்போதுள்ள 825 ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் எண்ணிக்கையை குறைந்தது 1000 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ஆங்கில மொழி கற்பித்தலானது வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான கருவியாக அமைய வேண்டுமே தவிர, சமூக இடைவெளியை உருவாக்கும் ஒன்றல்ல எனவும், புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கில மொழியை நடைமுறையில் பயிற்றுவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானிய கவுன்சில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த “இலங்கை கல்வி மாநாடு 2025” இல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “எதிர்கால தேவைகளுக்கு ஏற்ற, நியாயமான மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய கல்வி முறையை உருவாக்க பரந்த ஒத்துழைப்பு அவசியம். இதற்காக தேசிய மற்றும் மாகாண அரச அதிகாரிகள், கல்வி அமைச்சின் பிரதிநிதிகள், அபிவிருத்தி பங்காளர்கள், தனியார் துறை பங்குதாரர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரின் ஆதரவும் அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளடக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தரத்தை உயர்த்துதல் மூலம் சமமான ஆங்கிலக் கல்வியை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் ஆங்கில வழி கற்பித்தலை பலப்படுத்துதல் மற்றும் புத்தாக்கம் மற்றும் கற்றலுக்கான டிஜிட்டல் கருவிகளை உருவாக்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு மாணவரையும் மாறிவரும் எதிர்காலத்திற்கு எவ்வாறு தயார்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கில மொழி தொடர்பாக நிலவும் “மொழிக்கு அடிமையாகும் மனப்பான்மையில்” இருந்து விடுபட்டு, ஆங்கில மொழியை சமூகத்தின் பயனுள்ள கருவியாக ஊக்குவிக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆங்கில மொழி, வாய்ப்புகளை விரிவுபடுத்தும் ஒரு கருவியே தவிர, சமூக சமத்துவமின்மையை அதிகரிக்கக் காரணமாக அமையக்கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சமூக வகுப்பு, புவியியல் இருப்பிடம் அல்லது குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அதில் ஆங்கில மொழி கற்பித்தல் என்பது பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டிய ஒரு பாடமாக மட்டும் இல்லாமல், பேச்சு மற்றும் எழுத்து மூலம் ஆங்கில மொழியை மாணவர்கள் உண்மையாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் மொழிப் பயன்பாடு குறித்த அச்சத்தைக் குறைக்க ஆசிரியர்கள் தீவிரமாக தலையிடுவது மிகவும் முக்கியம். ஆங்கிலம் பேசுவது வெளிநாட்டினருக்குப் புரிந்தால் அது போதுமானது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல், ஆங்கில மொழி தொடர்பான மதிப்பீட்டு முறையும் மாற்றப்பட வேண்டும். இவை புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாக நாங்கள் கருதுகிறோம்.

புதிய பாடத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்காக ஆசிரியர் கல்வி முறைகளை வலுப்படுத்துதல், சேவையின் முன் மற்றும் பணியிடைப் பயிற்சித் திட்டங்களை வலுப்படுத்துதல், பாடத்திட்டங்களை நவீனமயமாக்குதல், புதிய பாடத்திட்டங்களைக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களைத் தயார்படுத்துவதற்கான தொடர்ச்சியான தொழில்சார் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, ஆங்கில வழி கல்விக்கான கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, தற்போது ஆங்கில வழிக் கல்வியை வழங்கும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 825 இல் இருந்து குறைந்தது 1000 ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், இருமொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம், கற்பித்தல் மற்றும் கற்றல் துறையை வேகமாக மாற்றி வருகிறது. ஆனால், கருவிகளுக்கு வரம்பற்ற அணுகல் உள்ள மாணவர்களுக்கும், எந்த உபகரணத்தையும் வாங்க முடியாத மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி இன்னும் நமது பாடசாலை அமைப்பில் காணப்படுகிறது. இந்த இடைவெளியைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும், இது புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப கருவிகளை மாணவர்கள் அணுகும் வகையில், ஆசிரியர்களுக்கு இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று பிரதமர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *