கொழும்பு கல்வி வலயத்திற்குள் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலையில் மாணவர்களை மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்வதற்காக அவரைத் தேடி வருவதாகவும், பதுளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தலைமறைவாக உள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த செய்தி தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 308 இன் கீழ் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பதுளையை வசிப்பவர் என்பதுடன் தற்போது தலைமறைவாகியுள்ளார், எனவே அவரை கண்டுபிடித்து கைது செய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறனர்.
கொழும்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவின் ஆசிரியரான சந்தேக நபர், தனது மேற்பார்வையின் கீழ் மூன்றாம் வகுப்பில் கற்கும் குழந்தைகளை “பெல்ட்டால்” அடித்து தண்டிப்பதாக இந்த மாதம் 8 ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு இணைக்கப்பட்ட தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தண்டனை வழங்கப்பட்ட சுமார் 7 வயதுடைய இரண்டு சிறுவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் சம்பந்தப்பட்ட பாடசாலையின் உதவி அதிபர் மற்றும் மாணவர்களது பெற்றோரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், விசேட புலனாய்வுக் குழு சம்பவங்கள் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு நடத்தியதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.