தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்கு மாத்திரம் 2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வித் திட்டத்தின் கீழ் புதிய பாடத்திட்டத்தை அமுல்படுத்துவற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதன் பின்னர் 2027 இல் தரம் 10க்கான பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், தரம் 1 மற்றும் தரம் 6 க்கான புதிய பாடத்திட்டங்கள் தொடர்பாக மற்றுமொரு முறை பரீட்சார்த்த அமுலாக்கத்தை முன்னெடுப்பதற்கான திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் (வடக்கின் ஏனைய மாவட்டங்களும் அடங்கலாக) பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலைகளில் இப்பரீட்சார்த்த அமுலாக்கத்தை முன்னெடுக்கும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் மற்றும் ஏற்பாடுகள் முடிவடைந்துள்ள நிலையில் குறித்த பிரதேச பாடசாலை ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி செயலமர்வுகளை பெப்ரவரி இறுதி மற்றும் மார்ச் மாதக் காலப்பகுதியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மொடியுல் முறை மற்றும் ஏனைய மாற்றத்துக்குரிய அம்சங்களை பொருத்தமான வகையில் அமுல்படுத்துவற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச காலத்தின் வியத்மக குழுவினரின் வழிகாட்டல்களின் கீழ் அப்போதைய கலைத்திட்ட மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி எம். சேதர அவர்களின் தலைமையில் இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர், ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில், கல்வி அமைச்சின் ஆலோசகர்களாக செயற்பட்ட பேராசிரியர் குணபால நாணக்கார மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் உருவாக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு அலகில் பணி புரிந்த சிலரின் வழிகாட்டலில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட வரலாறு அனைவருக்கும் அறிந்ததே.
அப்போது தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகமாக கலாநிதி சுனில் நவரத்ன பண்டார அவர்கள் கடமையாற்றினார். அதன் பின்னர், பேராசிரியர் பிரசாத் சேதுங்க கடமையாற்றினார். தற்போது, பேராசிரியர் மஞ்சுளா விதானபதிரண கடமையாற்றுகிறார்.
கல்வி அமைச்சின் செயலாளர்களாக 5க்கும் மேற்பட்டவர்கள் இக்காலப்பகுதியில் கடமையாற்றியிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரது வழிகாட்டல்கள் மற்றும் செல்வாக்குகளின் கலவையாகத் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டம் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்றி,அவ்வாறே அமுலாகவுள்ளது என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியமாக அமையலாம்.
