5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வெளியிடப்படும்
சுருக்கம்:
- 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்.
- பரிட்சை பாதுகாப்பை உறுதி செய்ய, ஒரு வள ஆதாரக் குழு மற்றும் கேள்வித் தாள்கள் வங்கி அமைக்கப்படும்.
- விசாரணையில் ஒரு தனியார் பயிற்றுவிப்பாளர் பரிட்சைக்கு முன்பாக கேள்விகளை கசியச் செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சட்ட நடவடிக்கைகள் – சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது அபராதம் மற்றும் தடை விதிப்பு.
- பரிட்சை முறைகேடுகளை தடுக்கும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலாக்கம்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரிட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பரிட்சை முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, அவர் பாராளுமன்றத்தில் பெப்ரவரி 27ம் திகதி இதனை அறிவித்தார்.
பரிட்சை முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், பரிட்சைத் திணைக்களத்தின் வளவாளர் குழுவும், வினா வங்கியும் உருவாக்கப்படும் என்றார்.
ஆய்வில் கேள்விகள் கசிந்தது உறுதி செய்யப்பட்டது
குற்றப்புலனாய்வு துறை (CID) நடத்திய விசாரணையில், முதல் கேள்வித் தாளிலிருந்து மூன்று கேள்விகள் குருநாகல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்றுவிப்பு ஆசிரியரினால் சமூக ஊடகக் குழு வழியாக பரிட்சைக்கு முன் பகிரப்பட்டன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பரிட்சை ஆணையாளர் நாயகம் நியமித்த விசேட குழு விசாரணை நடத்தி உறுதி செய்தது
பிரமர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:
அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள்
தவறில் ஈடுபட்ட 13வது சந்தேக நபர் 3 மில்லியன் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்றும் மேலும் 6வது மற்றும் 9வது சந்தேக நபர்கள் தலா 2 மில்லியன் ரூபா அரசு செலவினமாக செலுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
- தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் – பரிட்சை வேலைகளிலிருந்து நீக்கம், ஒழுங்கு விசாரணைக்கு உட்படுத்தல், ஊதியமின்றி இடைநீக்கம் முதலானவற்றுக்கு உட்படுத்தப்பட்டார். கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.
- சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை – பரிட்சை தொடர்பான அனைத்து பணிகளிலிருந்து நிரந்தரத் தடை மற்றும் ஒரே பாடசாலையில் பணியாற்றக்கூடாத கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
- குருநாகல் மாலியதேவ மாதிரி பாடசாலை ஆசிரியர் – ஐந்து ஆண்டுகளுக்கு பரிட்சை பணிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரிட்சை பாதுகாப்பு பலப்படுத்தப்படும்
இதேபோல், எதிர்காலத்தில் பரிட்சை முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்பட்டுள்ளன:
- திணைக்களத்தின் ரகசியப்பிரிவுக்குள் நுழையும் நபர்களுக்கு கண்டிப்பான பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- உள் கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மேம்படுத்தல்.
- கேள்வித்தாள்கள் தயாரிப்பை அரை தானியங்கி முறையில் மாற்றி, மனித தீர்மானங்களைக் குறைத்தல்.
- பரிட்சை கண்காணிப்பு வலுவூட்டப்பட்டு, சோதனைகளை அதிகரித்தல்.
- பரிட்சை மையங்களில், பிரதான பரிட்சை கண்காணிப்பாளரைத் தவிர, கையடக்கத் தொலைபேசி பயன்பாடு முற்றிலும் தடைசெய்தல்.
- பரிட்சை மையங்களில் முழு நேர வெளிப்புற கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுதல் முதலான தீர்மானங்கள் மேற்காெள்ளப்பட்டுள்ளன.
முறைகேடு நிகழ்ந்த மூன்று கேள்விகளுக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழுப் புள்ளிகள் வழங்கப்பட்டன
பரிட்சை முறைகேட்டால் எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில், கசிந்த மூன்று கேள்விகளுக்காக அனைத்து மாணவர்களுக்கும் முழுப் புள்ளிகள் வழங்கப்பட்டன.
நாடளாவிய மாணவர் பெற்றோர்கள் தாக்கல் செய்த வழக்குகள் காரணமாக, பரிட்சை மதிப்பீட்டு செயல்முறை உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் டிசம்பர் 31, 2024 உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மதிப்பீடு மீண்டும் தொடங்கப்பட்டு, பெறுபேறு வெளியிடப்பட்டது. இதன் வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்.
இந்த நடவடிக்கைகள் பரிட்சை முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எதிர்கால பரிட்சை முறைமைக்கு நம்பிக்கையை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
