இலங்கை பாடசாலைகளில் உயர்தரத்தில் கலைத்துறையில் கற்கவுள்ள மாணவர்கள் பாடத்தெரிவு தொடர்பான பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். ஏனைய துறைகளைப் பொறுத்தவரை தெரிவுக்குட்படும் பாடங்கள் மிகக் குறைவாக இருப்பதால் மிகப் பெரிய சிக்கல்கள் தோன்றுவதில்லை. ஆனால் கலைத்துறையைப் பொறுத்தவரை பெரும்பாலான பாடசாலைகளில் மரபு ரீதியான வழிகாட்டல்கள் மர்ததிரமே வழங்கப்படுவதால் அதிகமான மாணவர்களுக்கு கலைத்துறை பாடங்கள் தொடர்பான அறிமுகமில்லாத நிலை காணப்படுகின்றது.
இதன் காரணமாக ஒரே வகையான பாடங்களையே அனைத்துப் பாடசாலைகளிலும் தெரிவு செய்வதால் மாணவர்கள் கலைத்துறையினூடாக கிடைக்க முடியுமான பல வாய்ப்புக்களைப்; பெற்றுக் கொள்ளத் தவறிவிடுகின்றனர்.
கலைத்துறையைப் பொருத்தவரை காணப்படுகின்ற மிக முக்கியமான பிரச்சினை ஒன்றாக பெறுபேறுகளின் அடிப்படையில் குறைந்த பெறுபேறுகளைப் பெறுகின்றவர்கள்; கலைத்துறையை தெரிவு செய்கின்ற நிலையைக் குறிப்பிட முடியும். உயர் பெறுபேறுகளைப் பெறுகின்றவர்கள் விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம் போன்ற துறைகளைத் தெரிவு செய்கின்ற நிலையும் குறைந்த பெறுபெறுகளைப் பெறுகின்றவர்கள் கலைத்துறைக்கே தகுதியானவர்கள் என்ற மனப்பதிவும் மேற்படி நிலைக்குக் காரணமாக இருக்க முடியம். ஒரு மாணவன் உயர்தரம் கற்பதற்கு தெரிவு செய்ய வேண்டிய துறை பெறுபெறுகளின் ஊடாகவோ பிற அழுத்தங்களினூடாகவோ இடம்பெறக் கூடாது. அது மாணவனது கற்றல் விருப்பம் மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட வேண்டும்.
கலைத்துறை சார்ந்த மாணவர்கள் பாடத்தெரிவின் போது கவனத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைகளில்
கவனம் செலுத்துவோம்.
க.பொ.த உயர்தர கலைப்பிரிவில் அதிகமான பாடங்கள் காணப்படுவதால் பாடங்கள்
நான்கு தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தொகுதி 01 – சமூக விஞ்ஞான பாடங்கள்
பொருளியல்
புவியியல்
வரலாறு
மனைப்பொருளியல்
விவசாய விஞ்ஞானம்
தொடர்பாடலும் ஊடக கற்கைகளும்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பவியல்
அரசியல் விஞ்ஞானம்
அளவையியலும் விஞ்ஞான முறையும்
தொகுதி 02 – சமயங்களும் நாகரிகங்களும்
எமது நாட்டில் காணப்படும்
பிரதான 4 சமயங்களையும் அது சார்ந்த
நாகரீகங்களையும் உள்ளடக்கியே தொகுதியே இது.
உதாரணமாக இஸ்லாம்
ஒரு பாடமாகவும் இஸ்லாமிய நாகரீகம் மற்றுமொரு பாடமாகவும் கவனத்திற் கொள்ளப்படுகின்றது.
தொகுதி 03 – அழகியல் கற்கைகள்
வரைதல்
நடனம்
சங்கீதம்
நாடகமும் அரங்கியலும்
தொகுதி 04 – மொழிகள் நான்காவது தொகுதி
3 பாடப்பிரிவுகளைக் கொண்டது.
தேசிய மொழிகள் – தமிழ், சிங்களம், ஆங்கிலம்
சாஸ்திரிய மொழிகள் – அரபு, பாளி, சமஸ்கிருதம்
வெளிநாட்டு மொழிகள் – சீனம், பிரெஞ்சு, ஜேர்மன், ஹிந்தி, ஜப்பான், மலாய், ரஷ்யன்
மேற்படி பாடத் தொகுதிகளிலிலிருந்து
பாடங்களை தெரிவு செய்யும்; போது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
- சமூக விஞ்ஞான பாடங்களிலிலிருந்து குறைந்த பட்சம் ஒரு பாடத்தையேனும் அவசியம் தெரிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களைத் தெரிவு செய்ய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை தெரிவு செய்யும் போது குறித்த மாணவனுக்கான பல்கலைக்கழக வாய்ப்பு அதிகரிக்கும்.
- சமயங்களும் நாகரீகங்களும் எனும் தொகுதியிலிருந்து ஒரே சமயத்தையும் குறித்த சமயத்தின் நாகரீகத்தையும் தெரிவு செய்ய முடியாது. இரண்டில் ஒன்றை மட்டுமே தெரிவு செய்ய முடியும். உதாரணமாக இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் ஆகிய இரு பாடங்களையும் தெரிவு செய்ய முடியாது.
- அழகியல் பாடங்களிலிருந்து அதிக பட்சம் இரு பாடங்களை மட்டுமே தெரிவு செய்ய முடியும்.
- மொழிகளுக்குரிய தொகுதிகளிலிருந்து ஒரு மாணவர் 3 தேசிய மொழிகளையும் தெரிவு செய்ய முடியும். அவ்வாறு தெரிவு செய்யும் பட்சத்தில் சமூக விஞ்ஞான பாடங்களிலிருந்து எதையும் தெரிவு செய்ய வேண்டியதில்லை.
- மாணவர்கள் இரு மொழிகளை இத்தொகுதியிலிருந்து தெரிவு செய்தால் மூன்றாவது பாடமாக சமயம் அல்லது அழகியல் பாடங்களிலிருந்து ஒரு பாடத்தை தெரிவு செய்ய முடியும். இத்தகைய சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் சமூக விஞ்ஞான பாடங்களிலிருந்து ஒரு பாடத்தை தெரிவு செய்ய வேண்டியதில்லை.
மேற்படி பாடங்களைத் தெரிவு செய்து சித்தியெய்துகின்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு விண்ணப்பிக்க முடியும். 2023 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கலைப்பிரிவிலிருந்து கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 13,055 ஆகும்.
கலை பீடத்திற்கு தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களைப் பொறுத்தவரை கற்கைநெறிகளுக்கான அனுமதி பெரும்பாலும் தீவளாவிய திறமையே முன்னுரிமைப்படுத்தப்படும். கலைப்பிரிவின் அழகியல் கற்கைநெறிகளைப் பொறுத்தவரை தெரிவு மாவட்ட திறமை மூலப்பிரமான அடிப்படையும் கவனத்திற்கொள்ளப்படும். எனவே மாணவர்கள் பாடங்களைத் தெரிவு செய்யும் போது Z புள்ளி அதிகம் வழங்கப்படுகின்ற பாடங்களில் கூடிய கவனம் செலுத்துவது அவசியமாகும். ஒரு பாடத்திற்கான Z புள்ளியை தீர்மானிப்பதில் பாடத்தின் கடினத்தன்மை,
தீவளாவிய ரீதியில் பாடத்தைத் தெரிவு செய்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை, குறிப்பிட்ட வருடத்தில்
குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்கள் பெற்றுக் கொண்ட புள்ளிகளின் இடைநிலை (தீவளாவிய ரீதியில்
ஒரு பாடத்தின் சராசரி புள்ளி) போன்ற விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. சமூக விஞ்ஞானப் பாடங்களை அதிகரித்துக் கொள்கின்ற அளவுக்கு Z புள்ளியிலும் அதிகரிப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
சமூக விஞ்ஞானப் பாடங்களில் கூட Z புள்ளிகளின் வீச்சு பாடத்திற்கு பாடம் வேறுபடும்.
உதாரணமாக அரசியல் விஞ்ஞானத்தை விட புவியியல், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், பொருளியல் போன்ற பாடங்களின் Z புள்ளி பெரும்பாலும் கூடிய நிலையிலேயே காணப்படும்.
அதே சமயம் மாணவர்கள் தெரிவு செய்யும் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய மற்றும் சில பீடங்களுக்கும் விண்ணப்பிக்க முடியும். இந்த வகையில் பின்வரும் கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க கலைப்பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட முடியுமான மாணவர்களின் தகுதி தொடர்பாக அவதானம் செலுத்துவோம்.
சட்டபீடம்
பின்வரும் பாடங்களிலிருந்து 3 பாடங்களை அல்லது குறைந்த பட்சம் ஒரு பாடத்தை தெரிவு செய்ய வேண்டும். புவியியல், வரலாறு, பொருளியல், அரசியல் விஞ்ஞானம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம், தொடர்பாடல் ஊடகக் கற்கை, விவசான விஞ்ஞானம். எஞ்சிய ஒரு பாடத்தை அல்லது இரு பாடங்களை சமயம்,
சமய நாகரீகம், தேசிய மொழி என்பவற்றிலிருந்து தெரிவு செய்ய முடியும்.
நிலத்தோற்றக் கட்டடக்கலை.
புவியியல், சித்திரம், விவசாய விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் குறைந்தது ஒரு பாடத்தோடு ஏனைய இரு பாடங்களை பின்வரும் பாடங்களிலிருந்து தெரிவு செய்யலாம். நாகரீகம் சார் பாடம் (இஸ்லாமிய
நாகரீகம்), ஏதாவது மொழிப்பாடம், வரலாறு, பொருளியல், மனைப் பொருளியல், அரசியல் விஞ்ஞானம், தொடர்பாடல் ஊடகக் கற்கை
கட்டடக்கலை
புவியியல்,சித்திரம், ஆகிய பாடங்களில் குறைந்தது ஒரு பாடத்தோடு ஏனைய இரு பாடங்களை பின்வரும் பாடங்களிலிருந்து தெரிவு செய்யலாம். நாகரீகம் சார் பாடம் (இஸ்லாமிய நாகரீகம்), ஏதாவது மொழிப்பாடம், வரலாறு, பொருளியல், மனைப் பொருளியல், அரசியல் விஞ்ஞானம், தொடர்பாடல் ஊடகக் கற்கை, விவசாய விஞ்ஞானம்
தகவல் தொழிநுட்பமும் முகாமைத்துவமும்
கலைத்துறைக்குரிய பாடங்களான புவியியல், பொருளியல்,
அளவியலும் விஞ்ஞான முறையும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் இரு பாடத்தைத் தெரிவு செய்து திறமைச் சித்தி பெற்றிருத்தல் போதுமானது. ஏனைய பாடம் தொடர்பான வரையறைகள் கிடையாது
தகவல் முறைமைகள்
கலைத்துறைக்குரிய பாடங்களான புவியியல், பொருளியல்,
அளவியலும் விஞ்ஞான முறையும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம், அரசியல்; விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் இரு பாடங்களைத் தெரிவு செய்து திறமைச் சித்தி பெற்றிருத்தல் போதுமானது. ஏனைய பாடம் தொடர்பான வரையறைகள் கிடையாது
தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்
புவியியல், பொருளியல், அளவியலும் விஞ்ஞான முறையும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம், ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் போதுமானது. ஏனைய பாடம் தொடர்பான வரையறைகள் கிடையாது
பின்வரும் கற்கை நெறிகளுக்கு கலைத்துறையின் எப்பாடத்தை தெரிவு செய்தோறும் விண்ணப்பிக்க முடியும்.
- நவநாகரீக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும்
- வடிவமைப்பு
- முகாமைத்துவமும் தகவல் தொழிநுட்பமும்
- தொழில் முயற்சியும் முகாமைத்துவமும்
- கைத்தொழில் தகவல் தொழிநுட்பம்
- விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்
- உடற்றொழில் கல்வி
- விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்
- மொழிபெயர்ப்புக் கற்கைகள்
- திரைப்படம், தொலைக்காட்சி கற்கைகள்
- செயற்திட்ட முகாமைத்துவம்
அத்துடன் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் கற்க கலைத்துறையின் சில பாடங்களை கட்டாயப்படுத்துகின்றன.
அவற்றையும் சுருக்கமாக நோக்குவோம்
கிழக்குப் பல்கலைக்கழக தொடர்பாடல் கற்கைகள் தேசிய மொழிப்பாடங்களான
ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய பாடங்களில் ஒன்றைத் தெரிவு செய்து திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் இஸ்லாமிய கற்கைகள். இஸ்லாம் அல்லது இஸ்லாமிய நாகரீகத்தை ஒரு பாடமாக தெரிவு செய்திருக்க வேண்டும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும்
அரபு மொழி கற்கைகள் அரபு மொழியை ஒரு பாடமாக தெரிவு செய்திருக்க வேண்டும்.
களனிப் பலழகலைக்கழக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்பித்தல் கற்கை நெறி அரபு மொழியை ஒரு பாடமாக தெரிவு செய்திருக்க வேண்டும்.
ஒரு மாணவன் தனக்கான எதிர்கால வாய்ப்புக்களை விளங்கி மிகக் கவனமாக பாடங்களைத் தெரிவு செய்கின்ற போது போட்டித்தன்மை நிரம்பிய இத்துறையிலிருந்து இலகுவாக தெரிவு செய்யப்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.