கல்வி அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இணைந்து தனியார் பல்கலைக்கழக கண்காணிப்பு மற்றும் பதிவு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த வாரம் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன இதனைத் தெரிவித்தார்.
பதிவுசெய்யப்பட்ட 27 அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக தனியார் பல்கலைக்கழகங்களின் மேற்பார்வையின்மை தரத்தை பேணுவதில் பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
சில தனியார் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்துள்ளதாக விளம்பரம் செய்ததாகவும், ஆனால் முறையான பதிவு முறை இல்லை என்றும் கூறிய அமைச்சர், தமது தொழில் நடவடிக்கைகளை தொடர வேண்டுமாயின் பல்கலைக்கழகத்தை கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
தற்போதுள்ள விதிமுறைகளை மீறும் வகையில் அமைச்சு பதிவு செய்யாமல் இயங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக கூறிய பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, பதிவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
கண்காணிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள், கல்வித் தகைமைகள், வழங்கப்படும் பாடநெறிகளின் தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு இணங்காத நிறுவனங்களை இடைநிறுத்தப்படும் என்றும் கல்வி பிரதி அமைச்சர் மேலும் கூறினார்
