தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள்

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள்

தொடர்பாடல் திறனை மேம்படுத்த 10 வழிமுறைகள்

10 Ways to Improve Communication Skills

logaraja

சி.லோகராஜா, விரிவுரையாளர்

தேசிய கல்விக் கல்லூரி, மட்டக்களப்பு.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய திறன் தொடர்பாடல் திறனாகும். நம்மில் பலர் தொடர்பாடல் எனும் போது நன்றாக பேசினால் போதும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அது மட்டும் அல்ல. தொடர்பாடல் எனும் போது அதையும் தாண்டி நாம் எப்படி மற்றவர்களை புரிந்து கொள்கின்றோம். அவ்வாறு புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான விடயங்களை எப்படி உரையாடுகிறோம் என்பதையும் உள்ளடக்கியது.

தொடர்பாடல் திறன் என்பது மேடையில் பேசுவது மட்டுடல்ல, ஏதாவது கூட்டம் அல்லது ஒன்றுகூடலில் பேசுவதாயினும் சரி, தொழில்முறை ரீதியாக உரையாடுவாயினும் சரி, உறவு முறைகளுக்கிடையில் பேசுவதாயினும் சரி, ஏன் கணவன் – மனைவி, பெற்றோர் பிள்ளுக்கிடையில் உரையாடுவதாயினும் சரி ஒரு முறையான தகவல் பரிமாற்றத் திறன் என்பது அவசியமான ஒன்றாகும். இதை நாம் புரிந்து கொண்டு அதை வாழ்க்கையில் அமுல்படுத்துவதற்கான 10 வழிமுறைகள் பற்றி இக் கட்டுரையில் நோக்குவோம். நாம் யாரிடம் பேசுவதானாலும் சரி, இந்த 10 வழிமுறைகளை எமது தொடர்பாடலில் சேர்த்துக் கொண்டோமேயானால் எமது தொடர்பாடல் திறனை நிச்சயமாக மேம்படுத்திக் கொள்ளலாம்.

  1. நமது எண்ணங்களில் தெளிவாக இருப்போம் : பேசுவதை விட மிகவும் முக்கியமானது பேசுவதற்கு முன்னர் நமது எண்ண ஓட்டங்கள் சீராக இருக்கின்றதா? என்பதைப் புரிந்து கொள்வதாகும். நாம் என்ன பேசப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். அனேக சந்தர்ப்பங்களில் எம்மிடம் தெளிவான எண்ணங்கள் இல்லாமையால் மற்றவர்களுடன் உரையாடும் போது நிறைய தடங்கல்களை எதிர்கொள்கிறோம், சொல்ல வந்த விடயங்களை முழுமையாக சொல்ல முடியாது தடுமாறுகின்றோம். நாம் விரிவாக உரையாடுவதாயினும் சரி, சுருக்கமாகப் பேசுவதானாலும் சரி, எதுவாக இருந்தாலும் நாம் பேசப்போகும் விடயம் பற்றிய தெளிவான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். நம்மில் பலர் பேசத் தொடங்கிய பின்புதான் சிந்திக்கத் தொடங்குவார்கள். அதனாலேயே அவர்கள் பேசும் போது நிறைய தடங்கல்களை எதிர்கொள்கிறார்கள்.. ஆகவே நாம் யாரிடம் பேசுகிறோம்?, அவர்களிடம் என்ன செய்தியை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்?, அவர்கள் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பது பற்றி நாம் முன்னரே சித்திக்கத் தொடங்க வேண்டும். அப்படி சிந்திக்கும் போது நமது சிந்தையில் என்ன தோன்றுகிறதோ அதுதான் நாம் பேச வேண்டிய விடயம். அப்படி நமது சிந்தையில் தோன்றுகின்ற விடயத்தை பேசத்தொடங்கினால் நம்மால் தெளிவாகவும் பேசமுடியும்> சொல்லவந்த விடயத்தைச் சரியாகவும் சொல்ல முடியும்.
  2. சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பேசுவோம் : நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். இது இடமாக மட்டுமல்ல, அங்கிருப்பவர்கள் மனரீதியாக எப்படி இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்வதாகும். அவர்கள் சோகமாக இருக்கிறார்களா?, அல்லது சந்தோசமாக இருக்கிறார்களா? அல்லது விரக்தியாக இருக்கிறார்களா? இப்படி எந்த சூழ்நிலையில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசப்போவது ஒரு தனி நபரிடமா? அல்லது கூட்டமாக இருக்கின்ற அதிகளவிலான மக்களிடமா? என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவரிடம் மட்டும் பேசும் போது அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டால் போதும், ஆனால் கூட்டமாக இருக்கின்ற அதிகளவிலான மக்களிடம் பேசும் போது அங்கிருப்பவர்களின் பொதுவான சிந்தனைக்கு ஏற்பவே நாம் பேசியாக வேண்டும். ஆகவே எப்பவுமே இடம்> பொருள், ஏவல் என்பவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் பேசுவோம்.
  3. மக்களைப் புரிந்து கொண்டு பேசுவோம் : நாம் சொல்லப் போகும் விடயங்களைச் சொல்வதற்கு முன்னர் எதற்காக அந்த விடயங்களைச் சொல்லப்போகிறோம்?, அந்த விடயங்கள் யார்யாருக்கெல்லாம் தேவை? யார்யாருக்கெல்லாம் தேவையில்லை? என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே நாம் யாருக்காகப் பேசுகிறோம்? ஏதற்காகப் பேசுகிறோம்? அவர்களுக்கு என்ன தேவைப்படுகின்றது? என்பதைப் புரிந்து கொண்டு பேசுவதுதான் சரியான முறையாகும்.
  4. மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்போம் : நாம் பேசுவது மட்டுமே தொடர்பாடல் ஆகாது, நாம் பேசி முடிந்த பின்பு மற்றவர்கள் அவர்களது கருத்துக்களை அபிப்பிராயங்களைச் சொல்லும் போது நாம் அவற்றைக் கவனிப்பதும், உன்னிப்பாகச் செவிமடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும். நாம் பிறர் சொல்வதை உன்னிப்பாகவும், கவனமாகவும், பொறுமையாகவும் செவிமடுப்பதை வைத்துத்தான் நாம் அடுத்த தடைவை பேசும்போது அவர்கள் கவனிப்பார்களா இல்லாயா? என்பது தீர்மானிக்கப்படும். சில நேரங்களில் நம்மில் பலர் பிறர் பேசும்போது குறுக்கிட்டு பேசுபவர்களாக இருக்கின்றோம். நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்போம். இது முற்றிலும் தவறான ஓர் விடயமாகும். ஏனெனில் நாம் பதிலிறுப்பதற்காக மட்டும் செவிமடுப்பதில்லை மாறாக அவர்களைப் புரிந்து கொள்வதற்காகவுமே செவிமடுக்கின்றோம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இயலுமானவரை மற்றவர்கள் பேசும்போது அதை உன்னிப்பாக, ஆர்வத்தோடு செவிமடுக்க வேண்டும்.
  5. நமக்கு தெரிந்ததை மட்டும் பேசுவோம் : தெரியாத ஒரு விடயத்தைப் பற்றி பேசச் சொன்னால் நாம் எப்படி முளிப்போம், எப்படித் திண்டாடுவோம், தேவையற்ற விடயங்களை எப்படி உளறிக் கொட்டுவோம். என்பதையும் தெரிந்த ஒரு விடயத்தை பேசச் சொன்னால் எப்படி ஆர்வமாகவும், சரளமாகவும் ஆழமாகவும் பேசுவோம் என்பதையும் சற்றுச் சிந்திப்போம். நாம் பேசப்போகும் விடயத்தைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். அதே போல நாம் சொல்லப் போகும் விடயங்களை கதைகன் மூலமாக சொல்லுதல் இன்னும் சிறப்பானதாகும். ஏனெனில் கதையாக சொல்லும் போது மக்கள் இலகுவாக அதன்பால் ஈர்க்கப்படுவார்கள். எனவே ஒரு விடயத்தைப் பேச முன்னர் அதற்காகத் தயாராவது மிகவும் முக்கியமானதாகும்.
  6. சொல்வதைச் சுருக்கமாகச் சொல்லுவோம் : நாம் என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை முடிந்தளவுக்கு சுருக்கமாகச் சொல்ல வேண்டும். சில முக்கிய சமயங்களில் பெரிய மனிதர்களுடன் பேசும்போதோ, அலுவலகத்தில் மேலாளருடன் பேசும்போதோ குறுகிய நேரத்திலேயே அவர்களுடன் பேசவேண்டி இருக்கும். எனவே நாம் பேசுகின்ற மனிதர்களின் நேர வரையறையைப் புரிந்து கொண்டு எந்தளவுக்குச் சுருக்கமாக விடயங்களை முன்வைக்க முடியுமோ அந்தளவிற்கு இரத்தினச் சுருக்கமாக விடயங்களை முன்வைக்க வேண்டும்.
  7. பேசும் கருத்துக்களில் உண்மையாக இருப்போம் : நாம் பேசப்போகும் விடயங்களில் சந்தேகமே இருக்கக் கூடாது. நாம் பிறருடன் தொடர்பாடலை மேற்கொள்ளுகின்ற போது அவர்களிடம் சென்றடைவது வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, அதையும் தாண்டி நாம் என்ன சொல்ல விளைகிறோமோ அந்த விடயத்தின் மீது நமக்கிருக்கும் நம்பிக்கையும், உணர்வுகளும் அவர்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். அந்த விடயத்தை நாம் எவ்வளவு தூரம் நம்புகிறோம். அந்த விடயத்தை எவ்வளவு தூரம் உண்மையாக நம்பிப் பேசுகிறோம் என்பது போன்ற உணர்வுகள் கூட நாம் பேசுகின்ற வார்த்தைகள் மூலமாக அவர்களைச் சென்றடையும். எனவே நாம் சொல்லுகின்ற விடயங்களில் குழப்பமாகவும், நம்பிக்கையின்றியும் பேசுவோமேயானால் பிறருக்கு அவ்விடயத்தின் மீது நம்பிக்கை வராது. நாம் பேசுவதும் அவர்களைச் சென்றடையாது. எனவே நாம் பேசுகின்ற விடயங்கiளில் உண்மையும் நம்பிக்கைத் தன்மையும் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
  8. மரியாதையுடனும் பணிவுடனும் பேசுவோம் : நாம் எதைச் சொல்ல விளைகிறோமோ, அதை மரியாதையுடனும் பணிவுடனும் சொல்ல வேண்டும். அப்படிப் பேசும் போது இலகுவாக மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் அத்தோடு நமது கருத்துக்களை இலகுவாக அவர்களிடம் கொண்டு செல்லலாம். ஏனெனில் அனேக சந்தர்ப்பங்களில் நாம் உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது எவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் செலுத்த மாட்டோம். ஆகவே எவ்வாறான தொனியில் பேசுகிறோம்> எவ்வாறான வார்த்தைகளை உபயோகிக்கின்றோம் என்பது எல்லாமே முக்கியமானதாகும். நம்மை விட சிறியவர்களானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி மரியாதையுடனும் பணிவுடனும் பேச வேண்டும் என்பதை எப்பவுமே நினைவிற் கொள்வோம்.
  9. தன்னம்பிக்கையுடன் தைரியமாகப் பேசுவோம் : ஒரு நடிகனின் நடிப்பு பொய்யாக இருந்தாலும் அதை எப்படி உண்மையென்று நம்புகிறோமோ, அதேபோல நாம் சொல்லவரும் விடயத்தையும் தன்னம்பிப்பையுடன் தைரியமாகச் சொல்ல வேண்டும். நாம் தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டாலே போதும் தானாகவே தைரியமாக பேசத் தொடங்கிவிடுவோம். நாம் பேசப்போகும் விடயம் சொல்லக்கூடிய அளவிற்கு சிறப்பாக அமையாவிட்டாலும் கூட நாம் எந்தளவிற்கு தைரியமாக முன்வைப்புச் செய்கின்றோமோ அந்தளவிற்கு நாம் சொல்லுகின்ற விடயங்களை கேட்பவர்களுக்கு புரிய வைக்கும். எனவே நாம் எங்கு பேசினாலும் சரி, யாரிடம் பேசினாலும் சரி தைரியமாக தன்னம்பிக்கையுடன் பேசுவோம்.
  10. புது சிந்தனைகளையும் எதிர்மறையான கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வோம் : சில சமயங்களில் நாம் சொல்ல போகும் விடயம் நமக்கு உணர்ச்சி பூர்வமானதாக, நமக்கு சார்பானதாக இருக்கலாம். அந்த நேரத்தில் ஊணர்ச்சிவசப்பட்டு நிறைய விடயங்களை நாம் பேசலாம். அப்போது நம்மைச் சுற்றியிருப்பவர்கள் எமக்கு எதிர்மறையான விடயங்களை; பதிவிடலாம். அப்போது நாம் அவர்களுடன் முரண்படாமல் அவர்கள் சொல்ல வருகின்ற விடயங்களைப் பொறுமையாகக் கேடட்க வேண்டும். அவர்கள் சொல்வதும் சரியாக இருக்குமோ என்ற எண்ணத்தோடு கேட்க வேண்டும். அப்படிச் செய்கின்ற போது அவர்கள் தரப்பில் இருக்கக் கூடிய பல விடயங்கள் நமக்குப் புரியத் தொடங்கும்.

இந்த 10 விடயங்களையும் நமது தொடர்பாடலில் பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நமது பேச்சுத் திறனை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *