பிரதிபலிப்புக் கற்பித்தல் – ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை

பிரதிபலிப்புக் கற்பித்தல் – ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை

“பிரதிபலிப்புக் கற்பித்தல்ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை

“Reflective Teaching – A Pathway to Professional Growth for Teachers”

 S.Logarajah, Lecturer,

Batticaloa NatiOnal College Of EducatiOn

 அறிமுகம்

பிரதிபலிப்பு (Reflection) என்பது அறிவியல் சூழல்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு சொல்லாகும். அதைத் தவிர, இது நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் முக்கியமான இடம் பெற்றுள்ளது. நாம் கண்ணாடியில் நம்மை நோக்கும்போது, அங்கு நாம் காணும் பிரதிபலிப்பு — நமது உடல் தோற்றத்தின் பிரதிபலிப்பு — நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.

ஆனால் கல்வி உலகில் “பிரதிபலிப்பு” என்ற சொல் இதற்கும் மேலான, ஆழமான பொருளைப் பெறுகிறது. இது, உடல் தோற்றத்தை பார்ப்பதைவிட, நமது கற்பித்தல் முறைகள், அணுகுமுறை, தத்துவம், விளைவுகள் போன்ற அம்சங்களை பரிசீலனை செய்யும் ஒரு செயலாக மாறுகின்றது.

ஜோன் டூயி “பிரதிபலிப்பு சிந்தனை” (Reflective Thought) என்ற கருத்தை அறிமுகப்படுத்தினார். அவரின் கருதுகோள்:

“நாம் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வதில்லை. அனுபவத்தைப் பற்றிய பிரதிபலிப்பு சிந்தனையிலிருந்துதான் கற்றுக்கொள்கிறோம்.”

காலப்போக்கில், இதே போல் சிந்திக்கும் விதங்களை விவரிக்க பல சொற்கள் உருவானது:

  • விமர்சன சிந்தனை (Critical Thinking)
  • பிரச்சினை தீர்த்தல் (Problem-Solving)
  • உயர் மட்ட சிந்தனை (Higher-Level Thinking)

இவை அனைத்தும், ஆசிரியர்கள் தங்களது கற்பித்தலின் மீது ஆழமான சிந்தனையுடன் அணுக வேண்டும் என்பதையும், தொடர்ந்து முன்னேறும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

பிரதிபலிப்பு (Reflection) என்றால் என்ன?

பிரதிபலிப்பு என்பது நாம் செய்த செயல்களை பின்னோக்கிப் பார்ப்பதும், சிந்திப்பதும் ஆகும். இது நம்முடைய அனுபவங்கள், முடிவுகள், மற்றும் செயல்களை ஆழமாக ஆய்வு செய்வதற்கான ஒரு மெட்டாசிந்தனை (Metacognitive) உத்திஆகும்.

கற்பித்தலில் பிரதிபலிப்பு:

பிரதிபலிப்பு என்பது, நாம் ஒரு அழகான ஓவியத்தை வரைந்து விட்டு, ஒரு படைப்பாளியாக அதை பார்வையிட்டு:

  • “எவற்றை சிறப்பாக செய்தேன்?”
  • “எவற்றை இன்னும் சிறப்பாக செய்யலாம்?”

என சிந்திப்பதைப் போலத்தான்.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியரும், தாங்கள் கற்பித்த பாடத்தைக் குறித்து சிந்தித்து, தங்கள்:

  • கற்பித்தல் உத்திகள்
  • பயிற்சி முறைகள்
  • மாணவர்களுக்கு ஏற்படும் விளைவுகள்

ஆகியவற்றை மதிப்பீடு செய்து மேம்படுத்தும் செயற்பாடே பிரதிபலிப்பு ஆகும்.

பிரதிபலிப்பு: ஒரு சுய சிந்தனை உத்தி

பிரதிபலிப்பு என்பது ஒரு சுய சிந்தனை உத்தி (Metacognitive Strategy) ஆகும். இது ஆசிரியர்களுக்குத் தங்களது:

  • அனுபவங்கள்
  • செயல்கள்
  • முடிவுகள்

ஆகியவற்றை விமர்சனபூர்வமாக ஆய்வு செய்ய உதவுகிறது.

இதன் மூலம்:

  • பிழைகளை சரி செய்யலாம்
  • உத்திகளை மேம்படுத்தலாம்

இன்றைய கல்வி சூழலில் பிரதிபலிப்பின் அவசியம்

இன்று கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன:

  • கற்பித்தல் முறைகள்
  • நுட்பங்கள்
  • அணுகுமுறைகள்

இவை அனைத்தும் மாற்றமடைந்து வருகின்றன.

புதிய போக்குகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன், ஒரு ஆசிரியராக:

  • நமது கற்பித்தல்-கற்றல் செயல்முறையை அவதானிக்க வேண்டும்
  • சிந்திக்க வேண்டும்
  • மதிப்பீடு செய்ய வேண்டும்
  • மாற்றியமைக்க வேண்டும்

அப்போதுதான் “பிரதிபலிப்பு நிலை” எனப்படும் கற்பித்தலின் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும். இதன் மூலம், நாம் ஒரு மேம்பட்ட ஆசிரியராக மட்டுமல்ல, நமது மாணவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக மாற முடியும்.

பிரதிபலிப்பு நிலை (Reflective Level) – கற்பித்தலின் உச்சம்

பிரதிபலிப்பு நிலை என்பது கற்பித்தலின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆசிரியர்கள்:

  • சிந்தனையுடன்
  • திட்டமிட்ட அணுகுமுறைகளுடன்

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையின் முக்கிய நோக்கம்:

  • மாணவர்களின் அறிவாற்றல் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவதும்,
  • உயர்தரக் கல்வி அனுபவங்களை வழங்குவதும் ஆகும்.

பிரதிபலிப்புக் கற்பித்தல் (Reflective Teaching) என்றால் என்ன?

பிரதிபலிப்புக் கற்பித்தல் என்பது:

  • ஒரு ஆசிரியர் தங்கள் வகுப்பறைப் பணிகளை உற்று நோக்கும்
  • “ஏன் இப்படிச் செய்கிறேன்?” என்பதை சிந்திக்கும்
  • அது பயனளிக்கிறதா? என்பதை பரிசீலிக்கும்

ஒரு சுய அவதானிப்பு மற்றும் சுய மதிப்பீடு அடிப்படையிலான செயன்முறை ஆகும்.

ஒரு ஆசிரியராக நாம்,

  • நமது கற்பித்தல் உத்திகள்
  • நம்பிக்கைகள்
  • புரிதல்கள்

இவைகளை தொடர்ச்சியாக ஆழமாக சுய பரிசோதனை செய்ய வேண்டும்.  இதன் மூலம்:

  • நமது கற்பித்தல் முறைகள் மேம்படும்
  • மாணவர்கள் பெறும் கற்றல் விளைவுகள் உயர்வு பெறும்

பிரதிபலிப்புக் கற்பித்தலின் கட்டங்கள்:

  1. கற்பிப்பதற்கு முன்:
    செயல்முறைகளை திட்டமிடல், முன்னோட்ட சிந்தனை
  2. கற்பித்தல் நடுவில்:
    செயல்பாடுகளின் செயல்திறனை அவதானித்தல்
  3. கற்பித்த பிறகு:
    மதிப்பீடு, சிந்தனை, மாற்றங்கள்

ஒரு பிரதிபலிக்கும் ஆசிரியரின் சுய வினாக்கள்:

  • இப்போது என்ன செய்கிறேன்?
  • ஏன் இதை செய்கிறேன்?
  • மாணவர்கள் எவ்வளவு சிறப்பாகக் கற்றுக் கொள்கிறார்கள்?
  • அவர்கள் பெறும் கற்றல் விளைவுகள் என்ன?

இந்த சிந்தனையின் அடிப்படையில், ஒரு ஆசிரியர்:

  • தம் கற்பித்தலை சீரமைக்கலாம்
  • தொடர்ந்து மேம்படுத்தலாம்
  • மாணவர்களுக்கான கல்வி அனுபவத்தை சிறப்பாக்கலாம்

இந்த பிரதிபலிப்புக் கற்பித்தல் செயல்முறை, ஆசிரியர்களுக்குத் தங்களது கற்பித்தல் நடைமுறைகளை மதிப்பீடு செய்யவும், பல்வேறு உத்திகள் மூலம் அதை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் நன்மை பெறுவது ஆசிரியர்கள் மட்டும் அல்ல. மாணவர்களும் நேரடியாகப் பயனடைகிறார்கள், ஏனெனில்:

  1. கற்றல் உள்ளடக்கம் (What is taught):

அதிக பொருத்தமான மற்றும் சமகால தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உள்ளடக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

  1. கற்றல் முறை (How it is taught):

அறிவாற்றல் வளர்க்கும், மாணவர் ஈடுபாட்டை தூண்டும், பல்வேறு கற்றல் стиல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவை இரண்டும் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதால்: மாணவர்களுக்கு பொருத்தமான, விளைவூட்டும் கல்வி அனுபவம் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் தங்களது வலிமைகள் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

தங்களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகிறது.

புதிய யோசனைகள், புதிய உத்திகள் மீதான திறந்த மனப்பான்மை ஏற்படுகிறது.

கற்றல் செயன்முறைகளை மீளாய்வு செய்து, மாற்றம் செய்யும் தயாரிப்பு வளர்கிறது.

அதன் விளைவாக, மாணவர்கள் பெறும் கற்றல் விளைவுகள் மேம்படுகின்றன.

பிரதிபலிப்பின் வகைகள் (Types of Reflection)

பிரதிபலிப்பு (Reflection) என்பது ஒரே மாதிரியானது அல்ல — இது பலவகையாக நிகழ்கிறது. அவை மூன்று முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:

  1. செயலுக்கான பிரதிபலிப்பு (Reflection-for-Action)

Reflection-for-Action என்பது நமது கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைகளை மேம்படுத்தும் நோக்கில் நிகழும் பிரதிபலிப்பு ஆகும். இது ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாகும். இதை ‘வெற்றிக்கான இடைவெளியை நிரப்பும் பிரதிபலிப்பு’ (Closing the gap reflection) என்றும் அழைப்பர்.

இதில், நமது முன் அனுபவங்களைப் பயன்படுத்தி, எதிர்கால நடவடிக்கைகளுக்கு மாற்றங்களை மேற்கொள்கிறோம்.

இது இரண்டு வேளைகளில் நடைபெறலாம்:

1.1. செயலின் போது நிகழும் பிரதிபலிப்பு (Reflection-in-Action)

Reflection-in-Action என்பது நடப்பு செயல்பாடுகளின் போது, வகுப்பு நடக்கும் போதே, ஒரு ஆசிரியர் தன்னுடைய செயல்கள் குறித்து உணர்வுபூர்வமாக சிந்தித்து, தேவையான மாற்றங்களை உடனடியாகச் செய்யும் செயலாகும்.

இது, பல தடைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் வரும் போது, அந்த தருணத்தில் உணர்வுபூர்வமான தீர்வுகளை கண்டுபிடிக்கும் திறனை வளர்க்கிறது.

உதாரணமாக:

துசியந்தினி என்ற ஆசிரியை, ‘மரங்கள் நம் வாழ்விற்கு ஏன் அவசியம்’ என்ற தலைப்பை 6 ஆம் தர மாணவர்களுக்கு கற்பிக்கிறார். 20 நிமிட விரிவுரைக்குப் பிறகு, தனது வகுப்பில் உள்ள பல மாணவர்கள் ஆர்வத்தை இழந்து பாடத்தில் சலிப்படைந்ததை துசியந்தினி கவனித்தார். அவர் உடனே சிந்திக்கத் தொடங்குகிறார்:

“ஏன் மாணவர்கள் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள்”? அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று துசியந்தினி முடிவு செய்தார். மாணவர்கள் முழுமையாக ஈடுபடும்போது மட்டுமே இந்த தலைப்பை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

அப்போது அவர் செய்த (reflection-in-action) செயலின் நடுவிலேயே தன்னைக் கருத்தாய்வு செய்தல் மூலம், கடந்த 20 நிமிடங்களாக தாமே பேசிக் கொண்டிருந்ததுதான் இந்த சிக்கலுக்கான காரணம் என்று உணர்ந்தார். இதுவே மாணவர்களை செயலிழந்த கேட்பவர்களாக மாற்றியது, அதனால் அவர்கள் சலித்துவிட்டனர்.

உடனடியாக அவர் தனது கற்பித்தல் முறையை மாற்றினார். மாணவர்களின் ஈடுபாட்டை தூண்டும் வகையில் பல்வேறு தூண்டுதல்களை (stimuli) பயன்படுத்தினார். அவர் ஒரு சிந்தனைக் கிளறல் அடிப்படையிலான கலந்துரையாடலைத் (Brainstorming discussion) தொடங்கினார் மற்றும் மாணவர்களிடம் மரங்களைப் பற்றி அவர்களின் வாழ்க்கையில் நேரில் ஏற்பட்ட அனுபவங்களை பகிரச் சொன்னார். மாணவர்கள் கூறிய முக்கியமான நன்மைகளை பலகையில் எழுதினார், இதன் மூலம் காட்சி மற்றும் ஒலி உணர்வுகளையும் சேர்த்தார். சில நிமிடங்களில் மாணவர்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்த நிலையில் இருந்தனர். துசியந்தினி இந்த சிக்கலை வெற்றிகரமாக சமாளித்தார்.

1.2. செயலுக்குப் பிறகு நிகழும் பிரதிபலிப்பு (Reflection-on-Action)

இது வகுப்பு முடிந்த பிறகு நடைபெறும் பிரதிபலிப்பாகும்.. நாம் அப்பாடத்தின் பின்னர் சிந்தித்து பார்ப்போம்: என்னென்ன விடயங்கள் நன்றாக நடந்தன?, எதை மாற்றவேண்டும்?, மாணவர்கள் எப்படி பதிலளித்தார்கள்?

இது செயல்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, வெளிப்படையான அறிவைச் செயல்படுத்தும் திறனைக் குறிக்கிறது; இதன் மூலம், அனுபவங்களிலிருந்து  நுண்ணறிவுகளை பெற முடியும். மற்றும் எதிர்கால செயல்திறனை மேம்படுத்தும் உத்திகளை வடிவமைக்க முடியும்.

உதாரணமாக:

பிரதீபா என்ற விஞ்ஞான பாட ஆசிரியை, 8ம் தர மாணவர்களுக்கு “உயிரணுக்களின் அமைப்பும்  தொழிற்பாடுகளும்” என்ற தலைப்பில் கற்பித்தலை மேற்கொண்டார். பாடம் முடிந்ததும், மாணவர்கள் பெரும்பாலோரும் ஆர்வமின்றி இருந்தார்கள் மற்றும் சில சிக்கலான கருத்துகளைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டதாக அவருக்கு தெரிந்தது.

பாடத்திற்குப் பிறகு, மாணவர்கள் ஒரு உயிரணுக்களின் பகுதிப் பெயர்கள் மற்றும் அவற்றின் தொழிற்பாடுகளை அடையாளம் காண கேட்டபோது, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களால் மட்டுமே சரியாக பதிலளிக்க முடிந்தது.

பாடம் முடிந்த பிறகு பிரதீபா தனது பாடத்திட்டத்தை விமர்சனமாகப் பரிசீலித்தார். அப்போது, அவர் தனது கற்பித்தல் முறைகள் அதிகமாக கோட்பாடு சார்ந்ததாக இருந்ததையும், செய்முறைப் பயிற்சி நடவடிக்கைகள் குறைவாக இருந்ததையும் உணர்ந்தார்.

அடுத்த வாரம், பிரதீபா தனது கற்பித்தல் முறையை மாற்றினார்: பிரதீபா, உயிரணுக்களது அமைப்புகளை மீண்டும் உறுதிப்படுத்த மாணவர்களுக்கு ஒரு ஆய்வுகூட (lab) பயிற்சி அமர்வை அறிமுகப்படுத்த முடிவு செய்தார். அதில், மாணவர்கள் தாங்களே உயிரணுக்களின் ஸ்லைடுகளை தயார் செய்து, அவற்றை ஒளிவிரிச்சி (microscope) மூலம் அவதானித்தனர். மாணவர்கள் கூடுதலான செயற்பாடுடன் பங்கேற்றனர். அவர்கள் கற்றிருந்த உறுப்புகளை (organelles) அடையாளம் காண்பதிலும் பெயரிடுவதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். பிரதீபா தனது கற்பித்தல் அனுபவத்திலிருந்து நுண்ணறிவுகளைப் பெற்றார் (reflective thinking). அதன்பின், அவர் தனது பாடத்திட்டத்தை மாற்றி, மாணவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றினார்.

பிரதிபலிப்புக் கற்பித்தலின் நன்மைகள் என்ன?

இன்றைய கல்வி துறையின் துரித மாற்றங்களால் ஆசிரியர்களின் பணி மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. மாணவர்களின் ஆராயும் மனப்பான்மையை ஊக்குவிக்கவும், நீண்ட கால நினைவாற்றலை வளர்க்கவும், ஆசிரியர்கள் தங்களுடைய கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை எப்போதும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில், பிரதிபலிப்புக் கற்பித்தல் மிக முக்கியமானதாக அமைகிறது.

பிரதிபலிப்பு ஏன் முக்கியமானது.?

  • நம்மை ஆசிரியர்களாக உணரச் செய்கிறது.
  • நம் தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
  • மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறது.

தொடர்ந்தும் சுய மேம்பாட்டை ஏற்படுத்துகிறது. நாம் அதிகமாக பிரதிபலிக்கிற போதெல்லாம், நாம் ஒரு ஆசிரியராக நம் பாத்திரத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம்.

பிரதிபலிப்புக்கற்பித்தல்  மூலம் ஆசிரியர்களுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்.

சுய வழிப்புணர்வை விருத்தி செய்தல் (Improved Self-awareness)

பாடம் எவ்வாறு நகர்ந்து சென்றது, மாணவர்கள் எவ்வாறு எதிர்வினை ஆற்றினர் என்பதைக் அவதானித்துப் பார்ப்பதன் ஆசிரியர்கள் தங்கள் பலவீனங்கள் மற்றும் வலுவான பாகங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக:

ஒரு பாடம் முடிந்த பின், நமது உடல் மொழியை (Body Language) பற்றி சிந்திக்கும்போது, நாம் கைகளைக் குறுக்காகக் கட்டும் பழக்கம் உங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்குகிறது என்பதை உணரலாம்.

இந்த சுய விழிப்புணர்வு (self-awareness) நமது எதிர்கால வகுப்புகளில் மிகவும் திறந்த மனதுடன், அணுகக்கூடிய முறையில் நிற்கும் போக்கை எடுத்துக்கொள்ள உதவுகிறது.

மாணவர் ஈடுபாட்டை மேம்படுத்துதல் (Enhanced Student Engagement)

பிரதிபலிப்புக் கற்பித்தல் மாணவர்களின் ஆர்வத்தையும் உந்துதலையும் ஈர்க்கும், புதுமையான மற்றும் மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளை ஆராய ஆசிரியருக்கு அதிகாரம் அளிக்கிறது.

இது, ஊடாடும் செயல்பாடுகள், நிஜ வாழ்க்கை உதாரணங்கள், மற்றும் நடைமுறை பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பாடங்களை வடிவமைக்க நம்மை ஊக்குவிக்கிறது.

உதாரணமாக:

விஞ்ஞான பாடத்தின் போது செய்முறைப் பயிற்சிச் செயல்பாடுகளைச் சேர்ப்பது மாணவர்களின் பங்கேற்பையும் உற்சாகத்தையும் அதிக அளவில் உருவாக்குகிறது என்பதை நாம் அவதானித்திருக்கலாம்.

தகவமைப்புத் திறனை அதிகரித்தல். (Increased Adaptability)

பிரதிபலிப்பு கற்பித்தல் ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பல்வகைத் தேவைகளை புரிந்து கொண்டு, தங்களது கற்பித்தல் முறைகளை அதற்கேற்ப மாற்றுவதற்கான திறனை வளர்க்கிறது.

இது மாணவர்களின் செயல்திறன் மற்றும் கற்றல் முடிவுகளை மேம்படுத்த உதவுகிறது. நமது கற்பித்தல் முறைகள், அணுகுமுறைகள்,மற்றும் கற்றலுக்கான உதவிகள் எல்லாம் மாணவர்களின் தனித்த  தன்மைக்கு  ஏற்ப மாற்றப்படுகின்றன. இதன் விளைவாக, மாணவர்கள் மேலும் சிறந்த திறனோடும் செயல்திறனோடும் கற்றுக்கொள்ள முடிகிறது.

உதாரணமாக,

ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் முறை பார்வைத்திறன் குறைந்த மாணவர்களுக்கு பயனளிக்கவில்லை என்பதை நாம் உணரலாம். அதன் பிறகு, தொட்டு உணரும் அல்லது கேட்கக்கூடிய கூறுகளை உள்ளடக்கிய வகையில் நமது கற்பித்தல் வளங்களை மாற்றி அமைக்கலாம். இது அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை ஊக்குவிக்க உதவுகிறது.

வகுப்பறை முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல். (Strengthened Classroom Management).

பிரதிபலிப்புக் கற்பித்தல் (Reflective Teaching) என்பது ஆசிரியரது, வகுப்பறை முகாமைத்துவ பணிகளை சிந்திக்கவைக்கும் ஒரு நடைமுறையாகும். இது விதிமுறைகள், நேர்மறையான வகுப்பறைச் சூழல், மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனையை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் பாதுகாப்பாகவும், மதிக்கப்படுவதாகவும், கற்றலுக்குத் தூண்டப்படுவதாகவும் உணரும் வகையில் ஒரு உற்பத்திவாய்ந்த வகுப்பறைச் சூழலை உருவாக்கலாம்.

உதாரணமாக,

குழு செயல்பாடுகளின் போது மீண்டும் மீண்டும் குழப்பங்கள் ஏற்படுவதைக் அவதானித்த பின்பு, நீங்கள் தெளிவான கூட்டுச் செயல்முறைகள் தேவையென உணரலாம். இதன் மூலம், மாணவர்கள் அதிக கவனத்துடனும், உற்பத்தி திறன் கொண்ட சூழலிலும் கற்றலில் ஈடுபட முடிகிறது.

தொழில் முறை வளர்ச்சியை மேம்படுத்துதல் (Enhanced Professional Growth)

பிரதிபலிப்புக் கற்பித்தல் வாழ்நாள் கற்றலையும், தொழில்முறை மேம்பாட்டையும் ஊக்குவிக்கிறது. ஆசிரியரை சுயமான சிந்திக்க, பிறரிடமிருந்து கருத்துக்களைப் பெற, பயிற்சிப் பட்டறைகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்க SWOT பகுப்பாய்வு செய்ய, புதிய கற்பித்தல் முறைகளை ஆராய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதன்மூலம், ஆசிரியர் தொடர்ச்சியாக தனது அறிவை விரிவுபடுத்தி, கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்தி, கல்வித் துறையில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் ஆராய்ச்சிகளைப் பற்றிய அறிவை புதுப்பித்துக் கொள்ள முடிகிறது.

உதாரணமாக,

உங்கள் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு திறன்களைப் பற்றி நீங்கள் சிந்தித்து, உங்கள் பாடங்களில் புதிய கல்வி பயன்பாடுகளை இணைப்பது குறித்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள முடிவு செய்யலாம்.

 

மாணவர்களின் கற்றலை மேம்படுத்துதல் (Promoted Student Learning)

பிரதிபலிப்புக் கற்பித்தல் ஆனது, கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மாணவர்களின் கற்றல் முடிவுகள் (learning outcomes) இடையே வலுவான தொடர்பை உருவாக்குகிறது. இது ஆசிரியர்கள், மாணவர்களின் முன்னேற்றத்தை சரியாக பகுப்பாய்வு செய்து, அவர்களின் கற்றலில் காணப்படும் சவால்கள் மற்றும் மேம்பாட்டு தேவைகளை அடையாளம் காண உதவுகிறது. இதன் அடிப்படையில், கற்பித்தல் முறைமைகளை தேவையின்படி மாற்றலாம். ஆசிரியர்கள் ஆதாரமான கற்பித்தல் உத்திகளை பயன்படுத்த முடிகிறது, சமயோசிதமான மற்றும் பயனுள்ள பின்னூட்டங்களை வழங்க முடிகிறது, மேலும் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கற்பித்தலை தனிப்பயனாக்க முடிகிறது. இந்த முறையான அணுகுமுறை மாணவர்களின் ஈடுபாடு, ஆழமான புரிதல், மற்றும் மேம்பட்ட கல்வி பெறுபேறுகளை உறுதி செய்ய உதவுகிறது.

உதாரணமாக,

நாம் அண்மையில் கற்பித்த ஒரு பாடத்தை பிரதிபலித்து பார்க்கும்போது, நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மற்றும் கதைகூறல் என்பன மாணவர்கள் கருத்துகளை நன்கு புரிந்து கொள்ளவும் நீண்ட நேரம் நினைவில் வைத்துக்கொள்ளவும் பெரிதும் உதவுகின்றன என்பதை உணரலாம். இந்த அனுபவம், எதிர்கால பாடங்களில் மேலும் தொடர்புடைய மற்றும் ஆர்வமூட்டும் உள்ளடக்கங்களை சேர்ப்பதற்கான வழிகாட்டியாக அமையும், இதன் மூலம் மாணவர்களின் கற்றல் பெறுபேறுகள் மேம்படும்.

மதிப்பீட்டு செயன்முறைகளை மேம்படுத்துதல் (Improved Assessment Practices)

பிரதிபலிப்புக் கற்பித்தல் என்பது, ஆசிரியர்கள் தங்கள் மதிப்பீட்டு முறைகள் கற்றல் இலக்குகளுடன் இணைந்துள்ளதா என்பதை விமர்சனத் தணிக்கையுடன் ஆராய வைக்கும் ஒரு செயல்முறை ஆகும். தொடர்ந்து நடைபெறும் இந்த பிரதிலிப்பின் மூலம், ஆசிரியர்கள் தங்களின் மதிப்பீடுகள் துல்லியம், நம்பகம், நியாயத் தன்மை என்ற அளவுகோல்களில் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்ய வாய்ப்பு பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் பின்னூட்டங்களின் தரத்தையும் விரிவாக பரிசீலிக்க முடிகிறது. ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் திறமைகள், கற்றல் பாணிகள், மற்றும் முன்னேற்ற நிலைகள் குறித்து ஆழமான புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் மதிப்பீட்டு முறைகளை மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கிக், கொள்கிறார்கள். இவ்வாறு பிரதிபலிப்புக் கற்பித்தல் மூலம் மாணவருக்கு ஏற்ற தனிப்பட்ட மதிப்பீட்டு முறைகளை அமைத்து, நேர்மையான மற்றும் முழுமையான மதிப்பீட்டை வழங்க முடிகிறது.

உதாரணமாக,

ஒரு மாணவி செய்முறைப் பயிற்சிச் செயல்பாடுகளில் சிறப்பாகத் திறமை காட்டுகிறார், ஆனால் எழுத்துப் பரீட்சைகளில் சிரமப்படுகிறார் என்பதை ஆசிரியர் அவதானிக்கிறார். இந்த மாணவி  இயக்கவியல் மற்றும் பார்வை வழி கற்றலை விரும்புகிறார், எனவே எழுத்துப் பரீட்சைகள் அவரது முழுமையான அறிவை வெளிக்கொணரவில்லை என்பதை ஆசிரியர் உணர்ந்து கொள்கிறார். இதனால், மாதிரி உருவாக்கம் போன்ற மாற்று மதிப்பீட்டு முறைகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உருவாகிறது.

ஆசிரியர்மாணவர் உறவுகளை வலுப்படுத்துதல் (Strengthened Teacher-Student Relationships)

பிரதிபலிப்புக் கற்பித்தல் மாணவர்களுடன் நேர்மறையான மற்றும் பராமரிப்பு மிக்க உறவுகளை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை முன்னிலைப்படுத்துகிறது. இது, நமது தொடர்பு முறை, கேட்பதற்கான திறன், மற்றும் மாணவர்களின் தேவைகளுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம் என்பதைக் குறித்து சிந்திக்க ஊக்குவிக்கிறது.

பேச்சு நடை, உடல் மொழி, செவிமடுப்பது, மற்றும் குரல் ஓட்டம் ஆகியவற்றை பிரதிபலிப்பதன் மூலம், மாணவர்கள் மதிக்கப்படுகிறார்கள், புரிந்துகொள்ளப்படுகிறார்கள் என்பதைக் உணரச்செய்யும் ஒரு ஆதரவான மற்றும் உளவளத் தோட்டமிக்க கற்றல் சூழலை உருவாக்க முடிகிறது.

இத்தகைய சூழலில், மாணவர்கள் தங்கள் கற்றலில் செயல்பாடுடன் ஈடுபடுவதற்கும், கல்விச் சாதனையில் முன்னேறுவதற்கும் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.

உதாரணமாக,

ஒருநாள், வகுப்பறையில் ஒரு மாணவர் தொடர்ந்து கவனக்குறைவாக நடந்துகொண்டார். அவரது செயற்பாடுகள், வகுப்பின் ஓட்டத்துக்கு இடையூறாக இருந்தன. இதனால், ஆசிரியர் குறுகிய நேரத்தில் ஆத்திரமாக, பொறுமையின்றி ஒரு கட்டளைக் குரலில் மாணவரை எச்சரிக்கிறார். அந்த தருணத்தில், அவரது நோக்கம் மாணவரை ஒழுங்குபடுத்துவதே ஆனாலும், குரல் ஓட்டம் மற்றும் சொற்களின் நுட்பம் அவரிடம் ஒரு அதிர்ச்சி அல்லது வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாம்.

பாடம் முடிந்த பின், அந்த சம்பவத்தை சிந்தித்து பார்த்தபோது,
“நான் கொஞ்சம் நிதானமாக பேசியிருந்தால்… மாணவர் ஏற்கும் மனநிலையில் இருந்திருக்கக்கூடும்” என்ற எண்ணம் ஆசிரியரிடம் தோன்றுகிறது.

இந்த பிரதிபலிப்பின் விளைவாக, ஆசிரியர் அடுத்த நாள் அந்த மாணவரிடம் தனிப்பட்ட முறையில் பேச நேரம் ஒதுக்குகிறார்.
அவரின் உணர்வுகளை கேட்டு, தனது சொற்கள் எப்படிப் புண்படுத்தியிருக்கலாம் என்பதை சுயமாக ஏற்றுக்கொள்கிறார்.
இது மாணவருக்கு, அவர் மதிக்கப்படுகிறார், புரிந்து கொள்ளப்படுகிறார் என்ற உணர்வைத் தருகிறது.

இவ்வாறு, ஒரு நேர்மறை உரையாடல் மற்றும் கருணையுடனான அணுகுமுறை மூலம், அந்த மாணவர் எதிர்காலத்தில் வகுப்பில் தன்னம்பிக்கையுடன், அதிக ஈடுபாட்டுடன் செயல்படத் தொடங்குகிறார்.

வளர்ச்சி மனப்பாங்கை வளர்த்தல் (Fostering a Growth Mindset)

பிரதிபலிப்புக் கற்பித்தல் நமக்கும் மாணவர்களுக்கும் வளர்ச்சி மனப்பாங்கை வளர்க்க உதவுகிறது. இதில், சவால்கள், தவறுகள், மற்றும் தோல்விகள் எல்லாம் கற்றல் வாய்ப்புகளாக பார்க்கப்படுகின்றன.

ஆசிரியராக, நாம் இந்த மனப்பாங்கை நமது செயல்களில் காட்டும் போது, மாணவர்களும் அதை பின்பற்றத் தொடங்குகிறார்கள்.
அவர்கள் முயற்சியை மதிக்க, தோல்வியைப் பயப்படாமல் எதிர்கொள்ள, மற்றும் தொடர்ந்து முன்னேற தயார் ஆகிறார்கள். இப்படி, ஆர்வத்துடன் சிந்திக்க, சவால்களை எதிர்கொள்ள, மற்றும் முயற்சியின் சக்தியில் நம்பிக்கை வைக்க உதவும் ஒரு நேர்மறையான கற்றல் சூழல் உருவாகிறது.

உதாரணமாக,

ஒரு நாள், ஒரு புதிய பாடத்தை வகுப்பில் கற்பிக்கத் தயாராக ஒரு ஆசிரியர் வருகிறார். எல்லா கட்டுப்பாடுகளும் திட்டமிட்டிருந்தன  பாடக்குறிப்பு, செயல்பாடுகள், கேள்விகள் அனைத்தும் தயாராக இருந்தது. ஆனால் பாடம் ஆரம்பித்தவுடன், மாணவர்கள் ஈடுபாடின்றி, கேள்விகளைப் புரியாமல், அதிருப்தியுடன் இருப்பது அவருக்கு தெரிகிறது.

பாடம் முடிந்தபிறகு, ஆசிரியர் மனதில் கொஞ்சம் வருத்தத்தோடும், குழப்பத்தோடும் இருக்கிறார். அவர் தன் கற்பித்தலை பிரதிபலிக்க ஆரம்பிக்கிறார்: “நான் என்ன தவறு செய்தேன்?” என சிந்திக்கிறார். அந்த பிரதிபலிப்பின் மூலம் அவர் உணர்கிறார்:

  • பாடம் மிகக் கலைச்சொற்கள் கொண்டதாக இருந்தது
  • மாணவர்களின் தற்போதைய அறிவுக்கு ஏற்ப அடிப்படை விளக்கங்கள் இல்லாமல் இருந்தது
  • மாணவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த இயலாத சூழ்நிலை இருந்தது

இந்த உணர்வுகளை ஆசிரியர் மாணவர்களுடன் நேர்மையாகப் பகிர்கிறார்:

“நேற்று கற்பித்த பாடம் நன்றாக செல்வதாக நினைத்தேன். ஆனால் அது எனது திட்டமோடு பொருந்தவில்லை. சில விஷயங்கள் உங்களுக்குச் சற்று கடினமாக இருந்ததை உணர்ந்தேன். அதைப் பற்றி சிந்தித்தபோது, ‘நாம் எப்போதும் சரியாகச் செய்ய முடியாது. ஆனால் தவறுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம்’ என்பது எனக்கு புரிந்தது.” “நீங்கள் ஏதாவது தவறாகச் செய்தால், அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். அந்த தவறிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அது ஒரு பெரிய வாய்ப்பு. முயற்சி செய்வதே முக்கியம். நம்மால் முடியும் என்பதில் நம்பிக்கை வையுங்கள்!”

ஒத்துழைப்புக் கொண்ட கற்றல் சமூகங்களை ஊக்குவித்தல் (Encouraging Collaborative Learning Communities)

பிரதிபலிப்புக் கற்பித்தல் ஒரே நேரத்தில் நாமே கற்றுக்கொள்வதற்கும், மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது. இதன் மூலம், சக ஆசிரியர்களுடன் பேசுவதற்கும், அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும், புதிய யோசனைகளை பரிமாறிக் கொள்வதற்கும் நம்மை ஊக்குவிக்கிறது.

இந்த மாதிரி ஒத்துழைப்பு கொண்ட கற்றல் குழுக்களில் நாம் பங்கு கொள்வதன் மூலம்:

  • புதிய அறிவையும் அனுபவத்தையும் பெறலாம்
  • நம்முடைய திறன்களை மேம்படுத்தலாம்
  • கல்வித்துறையின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவராக பங்களிக்கலாம்.

 

 

உதாரணமாக,

ஒரு பாடம் மாணவர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது — உதாரணமாக, “விகிதங்கள்” பல மாணவர்கள் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை.

தொழில்முறை கற்றல் குழு (Professional Learning Community – PLC) கூட்டத்தில், ஒரு ஆசிரியர் அந்த பாடத்தை தான் கற்பித்த முறை பற்றியும் மாணவர்களிடமிருந்து வந்த எதிர் வினை பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதே பாடத்தை சக ஆசிரியர் ஒருவரும் கற்பித்திருக்கிறார் ஆனால் ஒரு வேறுபட்ட உத்தியைக் (strategy) கொண்டு. அவர் ஒரு விளையாட்டு, அல்லது ஒரு வாழ்க்கை உதாரணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். அந்த உத்தி மாணவர்களுக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது என்றும், அவர்கள் மிகச் சுறுசுறுப்பாகக் கலந்துகொண்டதாகவும் அவர் பகிர்கிறார்.

அவர்கள் இருவரும் தொடர்ந்து அந்த அனுபவங்களை வைத்து:

  • எது மாணவர்களுக்கு வேலை செய்கிறது,
  • என்ன மாற்றங்கள் செய்யலாம்,
  • அடுத்த முறை எப்படி இன்னும் சிறப்பாக கற்பிக்கலாம் என்று
    ஒன்றாக யோசித்து ஒரு புதிய, ஒத்துழைப்பு கொண்ட கற்பித்தல் திட்டத்தை உருவாக்குகிறார்கள்

இந்த முறையில், அவர்கள்:

  • புதிய யோசனைகளை அறிகிறார்கள்
  • உங்கள் கற்பித்தலை மேம்படுத்துகிறார்கள்
  • மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள்
  • மாணவர்களின் கற்றல் அனுபவத்தை சிறப்பாக்குகிறார்கள்

முடிவுரை

“பிரதிபலிப்புக் கற்பித்தல் – ஆசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கான பாதை” என்ற தலைப்பே போலவே, இந்தக் கட்டுரையின் ஒவ்வொரு அம்சமும் ஒரு முக்கிய உண்மையை வலியுறுத்துகிறது: ஒரு ஆசிரியரின் வளர்ச்சி, வெறும் அனுபவத்தின் மூலம் இல்லை – அனுபவத்தைப் பற்றிய சிந்தனையின் (பிரதிபலிப்பின்) மூலமேயாகும்.

இன்றைய கல்வி சூழலில், ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படும் திறன்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. மாணவர்கள், பெற்றோர், கல்வி நிறுவனங்கள், சமூகம்.. என எல்லோருக்கும் ஒரு சிறந்த ஆசிரியரிடமிருந்து எதிர்பார்ப்புகள் உயரும் நிலையில் உள்ளன. இந்நிலையில், தங்கள் கற்பித்தலின் மீது விமர்சன சிந்தனையுடனும், சுயவிமர்சனத்துடனும் தொடர்ந்து பிரதிபலிக்கக்கூடிய ஆசிரியர்களே, தொழில்முறை வளர்ச்சியின் பாதையில் முன்னேற முடியும்.

பிரதிபலிக்கும் கற்பித்தல் என்பது ஒரு தொடர்ச்சியான பயணம்.
இதில்: அனுபவங்களை ஆய்வு செய்கிறோம், நடைமுறைகளை சீராய்வு செய்கிறோம், புதிய வழிகளைத் தேடுகிறோம், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்குகிறோம்.

இதன் மூலம், ஆசிரியர்கள்:

  • தங்கள் திறன்களை விரிவுபடுத்த,
  • புதிய பாடத்திட்ட அணுகுமுறைகளை பயில,
  • மற்றும் நேற்றை விட சிறந்தவர் ஆக வளர முடிகிறது.

முக்கியமாக, பிரதிபலிப்பு என்பது ஒரு ஆசிரியரின் தொழில்முறை கடமையாக மட்டும் இல்லாமல், அவரின் உள்ளார்ந்த உணர்வுகளோடும், பொறுப்புணர்வோடும் இணைந்த ஒரு பயணமாகும். ஆசிரியர் தன்னுடைய கற்றல் முறைகள், வகுப்பறை அனுபவங்கள், மாணவர்களின் எதிர்வினைகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கும் போது, அவர் என்னை இன்னும் சிறப்பாக மாற்றிக் கொள்ளலாம் என உணர்கிறார். அந்த உணர்வே அவரை ஒரு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், மாற்றத்தை ஏற்படுத்தும் நபராகவும் மாற்றுகிறது. எனவே, “பிரதிபலிப்புக் கற்பித்தல்” என்பது ஆசிரியர்களின் வளர்ச்சிக்கான ஒரு தோழனும், மாற்றத்துக்கான ஒரு வழிகாட்டியுமான நம்பகமான தொழில்முறை பாதை ஆகும்.

 

உசாத்துணைகள்

Robert J. Marzano 2012 Becoming a Reflective Teacher” Bloomington, IN : Marzano Research Laboratory.

Bailey, K. M., Curtis, A., and Nunan, D. (2001). Pursuing Professional Development: The Self as Source. Boston: Heinle, Cengage Learning.

Brookfield, Stephen. (1995). Becoming a Critically Reflective Teacher. San-Francisco: Jossey-Bass.

Reflective Teaching(link is external)(link is external)”. Poorvu Center for Teaching and Learning, Yale.

Weimer, Maryellen. (2002). Learner-Centered Teaching: Five Key Changes to Practice. San-Francisco: Jossey-Bass.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *