இலங்கை அதிபர் சேவையில் முக்கிய திருத்தங்கள்: ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு மற்றும் இடமாற்றக் கொள்கைகளில் மாற்றங்கள்
இலங்கை அதிபர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பில் பல முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (2454/54) 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐந்தாவது திருத்தம், அதிபர் சேவைக்கான ஆட்சேர்ப்பு முறை, பதவி உயர்வுக்கான தகைமைகள், இடமாற்றக் கொள்கை மற்றும் திறன் விருத்தி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆட்சேர்ப்பு முறையில் புதிய நெறிமுறைகள்
இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கான ஆட்சேர்ப்பு முறையில் வெளிப்படைத்தன்மையையும், பரந்த வாய்ப்புகளையும் உறுதிசெய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பழைய நேர்முகப் பரீட்சை முறை முற்றிலுமாக நீக்கப்பட்டு, புதிய, பல-கட்ட செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1. மாவட்ட அடிப்படையிலான விண்ணப்பம்
மூன்று மாவட்டத் தெரிவுகள்: விண்ணப்பதாரிகள், வெற்றிடங்கள் உள்ள மூன்று மாவட்டங்களுக்குத் தங்களின் விருப்ப ஒழுங்கின்படி விண்ணப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
விருப்ப ஒழுங்கு மாற்ற இயலாது: விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட மாவட்ட விருப்பத் தெரிவு வரிசையை எந்தவொரு காரணத்திற்காகவும் பின்னர் மாற்றியமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
வெற்றிடங்கள் பகிரங்கப்படுத்தல்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமாக நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை, நேர்முகப் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்படும்.
2. நேர்முகப் பரீட்சைக்கான தெரிவு
திறமை வரிசை: எழுத்துமூலப் பரீட்சையில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒரு திறமை வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
அழைக்கப்படும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை: ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அங்குள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கையைப் போன்று குறைந்தபட்சம் இரு மடங்கு விண்ணப்பதாரர்கள் சாதாரண நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.
சிறப்பு நிபந்தனை: ஒரு மாவட்டத்தில் வெற்றிடங்களின் எண்ணிக்கை பத்துக்கும் (10) குறைவாக இருந்தால், குறைந்தபட்சம் 20 விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள்.
3. புதிய இரண்டு-கட்ட நேர்முகப் பரீட்சை
கட்டம் 1: சாதாரண நேர்முகப் பரீட்சை (General Interview)
இதன் முக்கிய நோக்கம், விண்ணப்பதாரர்களின் அடிப்படைத் தகைமைகளைச் சரிபார்ப்பது மாத்திரமே. புள்ளிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
கட்டம் 2: கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை (Structured Interview)
இதுவே ஆட்சேர்ப்பின் மிக முக்கியமான மாற்றமாகும். சாதாரண நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்ளும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்களின் அடிப்படைத் தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கருதப்படும் பட்சத்தில், கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். இது பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்ற பலருக்குத் தங்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு மேலதிக வாய்ப்பை வழங்குகிறது.
4. இறுதித் தெரிவு மற்றும் நியமனம்
மொத்தப் புள்ளிகள்: இறுதித் தெரிவானது, எழுத்துமூலப் பரீட்சையில் பெற்ற புள்ளிகள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சையில் பெற்ற புள்ளிகள் ஆகியவற்றின் கூட்டுத்தொகையின் அடிப்படையிலேயே அமையும்.
மாவட்ட தகுதிப் பட்டியல்: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இந்த மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் ஒரு திறமை ஒழுங்கு வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும்.
பல மாவட்ட தகைமை: ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களுக்குத் தகுதிபெறும் விண்ணப்பதாரர், தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த விருப்பத் தெரிவு ஒழுங்கு வரிசையின்படியே நியமனத்திற்காகப் பரிசீலிக்கப்படுவார்.
5. நியமனத்தின் பின்னரான நிபந்தனை
கட்டாய சேவைக் காலம்: இந்த ஆட்சேர்ப்பு முறையின் கீழ் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திற்கு நியமிக்கப்படும் அதிகாரி, அந்த மாவட்டத்திலிருந்து வெளி இடமாற்றம் பெறுவதற்கு முன், குறைந்தபட்சம் ஐந்து (05) வருடங்கள் அங்கு சேவையாற்றுவது கட்டாயமாகும்
பதவி உயர்வு மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள்
சேவையின் கட்டமைப்பு மற்றும் பதவி உயர்வுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘வகுப்பு’ (Class) என்ற பதம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ‘தரம்’ (Grade) என்ற பதம் பயன்படுத்தப்படும்.
தரம் II இற்கான பதவி உயர்வு: தரம் III இல் குறைந்தபட்சம் ஆறு (06) வருடங்கள் செயலூக்கமுள்ள மற்றும் திருப்திகரமான சேவையை நிறைவு செய்த அதிகாரிகள் தரம் II இற்கு பதவி உயர்வு பெறத் தகுதி பெறுவர்.
தரம் I இற்கான பதவி உயர்வு: தரம் II இல் குறைந்தபட்சம் ஆறு (06) வருடங்கள் செயலூக்கமுள்ள மற்றும் திருப்திகரமான சேவையை நிறைவு செய்தவர்கள் தரம் I இற்கு தகுதி பெறுவர்.
தகுதிபெறும் அதிகாரிகள் உரிய படிவங்கள் மூலம் விண்ணப்பித்த பின்னர், நியமன அதிகாரியால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்படும்.
திறன் விருத்தி மற்றும் வினைத்திறன்காண் தடைப் பரீட்சைகள்
அதிபர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய பயிற்சி நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆற்றல் விருத்திப் பயிற்சி 1: அனைத்து அதிகாரிகளும் அதிபர் சேவைக்கு நியமிக்கப்பட்டு ஆறு (06) ஆண்டுகளுக்குள் ஒரு மாத கால பயிற்சி நெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆற்றல் விருத்திப் பயிற்சி 2: தரம் II இற்கு பதவி உயர்த்தப்பட்ட அதிகாரிகள், ஆறு (06) ஆண்டுகளுக்குள் மற்றொரு ஒரு மாத கால பயிற்சி நெறியை பூர்த்தி செய்ய வேண்டும்.
தரம் III அதிகாரிகளுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைப் பரீட்சை மூன்று பாடங்களைக் கொண்டிருக்கும்: தாபன விதிக் கோவை, பாடசாலை நிதி நிர்வாகம் மற்றும் இணைப்பு மொழி (ஆங்கிலம்). ஆங்கில மொழித் தேர்ச்சிக்கான சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன; உதாரணமாக, ஆங்கில மொழி மூலத்தில் பட்டம் பெற்றவர்கள் அல்லது க.பொ.த (உ/த) பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடைந்தவர்கள் இதற்கு விலக்கு அளிக்கப்படுவர்.
இந்தத் திருத்தங்கள், இலங்கை அதிபர் சேவையை நவீனமயப்படுத்துவதற்கும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கும், அதிபர்களின் தொடர்ச்சியான தொழில்சார் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள ஒரு முக்கிய படியாகக் கருதலாம்.
மேலதிகமாக வாசிக்க, 5 ஆவது திருத்தத்தை பின்வரும் இணைப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்
