மன அழுத்தம் குறைந்தவகையில் பரீட்சையை 2028 முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் முடிவு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (10) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மூலம் குழந்தைக்கு ஏற்படும் உளவியல் சுமைகளைக் குறைக்கும் வகையில் பரீட்சை 2028 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
புலமைப்பரிசில் பரீட்சைகள் மூலம் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை நியமிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
பாடசாலைளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு காரணமாக புலமைப்பரிசில் பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலைகளுக்கு இடையேயான தரத்தில் உள்ள வேறுபாட்டைக் களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“பாடசாலைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு காரணமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை போட்டியாக மாறி வருகிறது, இது திறமையான குழந்தைகள் சிறந்ததாகக் கருதப்படும் பாடசாலையில் சேர வாய்ப்பளிக்கிறது. இந்த சூழ்நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பாடசாலைகளுக்கு இடையிலான வேறுபாட்டை படிப்படியாகக் குறைத்து, பாடசாலை கட்டமைப்புமுறையை மாற்ற முயற்சிக்கிறோம், குறிப்பாக நல்ல பாடசாலைகள், மோசமான பாடசாலைகள், தேசிய பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் போன்ற தரத்தில் வேறுபாடுகள் உள்ள பாடசாலை முறையை மாற்ற முயற்சிக்கிறோம். அதற்கு சிறிது காலம் எடுக்கும். அதுவரை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த வேண்டும். ஆனால், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கிறோம். அதற்காக, அடுத்த ஆண்டு ஒரு நிபுணர் குழுவை நியமிக்க உள்ளோம். 2028 முதல் குழந்தைகளுக்கு அந்த மன அழுத்தத்தைத் தராத ஒரு பரீட்சையை செயல்படுத்த முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதற்கு உண்மையான தீர்வு பாடசாலைளுக்கு இடையிலான தரத்தில் உள்ள வேறுபாட்டை நீக்குவதாகும். அது எங்கள் நீண்டகால திட்டத்தில் உள்ளது.” என்றார்
