அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவை வழங்கும் பட்டங்கள் தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் என பிரதமரும் கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றில், ரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாணகே எழுப்பிய வாய்மொழி மூல வினாவிற்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஒரு தேசிய கொள்கை வகுக்கப்படும் என்றும், இதன் மூலம் தனியார் பல்கலைக்கழகங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும், தொடர்புடைய தேசிய கொள்கையை வகுப்பதற்காக கல்வி அமைச்சின் உயர்கல்விப் பிரிவால் நிறுவப்பட்ட குழுவிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
செயல்முறை குறித்தும் விசாரணை
அண்மைக் காலமாக காலமாக, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் கொள்கை அல்லது ஒழுங்குமுறை செயல்முறை இல்லாமல் தோன்றியுள்ளதாகவும், இந்த செயல்முறை குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
பரிந்துரைக்கான குழு நியமனம்
அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பட்டம் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான முறைமை ஒன்றை உருவாக்குதவற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கல்வி அமைச்சு இரு வாரங்களுக்கு முன்னர், விசேட நிலையியல் குழு ஒன்றை ஸ்தாபித்திருந்தது. அதன் அங்குரார்ப்பன நிகழ்வில் கல்வி அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். இக்குழு வழங்கும் பரிந்துரைகளில் அடிப்படையில் பட்டம் வழங்குவதற்கான ஒழுங்குமுறை தொடர்பான சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
