ஆசிரியர் தினம்  2025: கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம்.

ஆசிரியர் தினம்  2025: கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம்.

ஆசிரியர் தினம்  2025: கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம்.

Teacher’s Day 2025 : Recasting teaching as a collaborative profession

logaraja

S.Logarajah

Lecturer, Batticaloa National College of Education

அறிமுகம்

உலக ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாராட்டும் மற்றும் நன்றி சொல்லும் ஒரு சிறப்பு நாளாகும். இந்த தினம், 1966ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் யுனெஸ்கோ (UNESCO) இணைந்து வெளியிட்ட பரிந்துரையை நினைவுகூரும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த பரிந்துரை, ஆசிரியர்களின்: உரிமைகள், கடமைகள், அவர்களுக்கான தொடக்க மற்றும் தொடர்ச்சியான பயிற்சி, ஆட்சேர்ப்பு மற்றும் கற்றல்/கற்பித்தல் சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கான தரநிலைகளை நிர்ணயிக்கிறது.

1997ஆம் ஆண்டில் உயர்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1966 ஆம் ஆண்டு பரிந்துரையை நிறைவேற்றும் வகையில், உயர்கல்வி ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை உள்ளடக்கியது.

1994 முதல் உலக ஆசிரியர் தினம் பல நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கையில் இது அக்டோபர் 6-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது..

ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்பட வேண்டும்.

  • இந்த நாள், நமக்கு அறிவையும் வழிகாட்டுதலையும் தரும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நாள்.
  • அவர்கள் இல்லாமல் நம் எதிர்காலம் இல்லை என்பதை உணரும் நாள்.
  • ஆசிரியர்கள் நம்மை எப்படி மாற்றுகிறார்கள் என்று கொண்டும் நாள்.
  • அவர்களின் திறமை மற்றும் சேவையை முழுமையாக வெளிக்கொணர எவ்வாறு நம்மால் உதவலாம் என்பதையும் சிந்திக்க வேண்டிய நாள்.
  • உலகளாவிய அளவில் ஆசிரியர் தொழிலை எவ்வாறு முன்னேற்றலாம் என்பதையும் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய நாளாகும்.

உலக ஆசிரியர் தினம் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), யூனிசெஃப் (UNICEF), மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு (EI) ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு முக்கிய நாள்.

ஆசிரியர்களின் சமகால நிலை

ஆசிரியர்கள் என்பவர்கள்  தரமான கல்விக்கான முதுகெலும்பு. அவர்கள், மாணவர்கள் நன்கு கற்றுக்கொள்வதற்கும், அனைவரும் இணைந்து பயிலும் நல்ல சூழலை உருவாக்கவும் முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்களின் உழைப்பு, நம் சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.

ஆனால் இன்று, ஆசிரியர் தொழில் ஒரு பெரும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய, அரசியல் தலைவர்களது உறுதியான ஆதரவு மிகவும் தேவையாக உள்ளது.

இந்த விடயம் சமீபத்தில் யுனெஸ்கோவும், சிலி அரசாங்கமும் சேர்ந்து நடத்திய உலக ஆசிரியர் மாநாட்டில் தெளிவாகக் வலியுறுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு எச்சரிக்கின்றது

  • 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்க விரும்பினால், உலகம் முழுவதும் கூடுதலாக 44 மில்லியன் (நாலு கோடி நாற்பத்து நான்கு லட்சம்) ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.
  • கடந்த ஏழு ஆண்டுகளில், ஆசிரியர் தொழிலிலிருந்து விலகும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இது, ஆசிரியர் பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்துகிறது.
  • இந்தக் குறைபாடு, ஆசிரியர்களின் வேலை சூழ்நிலைகளால் மேலும் மோசமாகி வருகிறது. பல நேரங்களில் ஆசிரியர்கள் தனிமையாகவே பணியாற்ற வேண்டி வருகிறது. அவர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன. சக ஆசிரியர்களிடம் இருந்து கற்றல், ஒருங்கிணைந்து வேலை செய்வது போன்ற முக்கியமான அனுபவங்கள் இல்லாமல், அதிக விளைவு தரும் கற்பித்தல் நடைமுறைகள் உருவாக முடியாமல் போகிறது.
  • ஆசிரியர் தொழிலில் இருந்து விலகும் ஆசிரியர்கள் அதிகரிக்கின்றனர்; புதியவர்கள் சேரும் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இதைத் தீர்க்க, வெறும் முதலீடு மட்டும் போதாது. ஆசிரியர்கள் தங்கள் முழு தொழில்முறை வாழ்க்கையிலும், ஒருவருடன் ஒருவர் இணைந்து பணியாற்றும் ஒரு நல்ல சூழல் உருவாக வேண்டும். இதற்காக வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

2025 உலக ஆசிரியர் தின கருப்பொருள்

2025ஆம் ஆண்டின் உலக ஆசிரியர் தினம், “கற்பித்தலை ஒரு கூட்டாண்மை மிக்க தொழிலாக மாற்றியமைப்போம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இது ஒரு முக்கியமான நினைவூட்டல் – கற்பித்தல் என்பது ஒரே நபரால் செய்யும் வேலை அல்ல; அது அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒன்று.

  • ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் சூழல்
  • அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கற்கும் வாய்ப்பு
  • ஒரே குழுவாக பொறுப்புகளை பகிர்ந்து செயல்படும் பழக்கம்
  • அரசியலிலும் நிர்வாகத்திலும் ஒத்துழைப்பு கொள்கைகள்

நாம் இந்த மாதிரியான சூழலை உருவாக்கினால்தான்: கல்வி தரம் மேலேறும், ஆசிரியர்கள் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் தங்கள் பணியைச் செய்வார்கள்.

உலக ஆசிரியர் தினத்தில் விடுக்கப்படும் அறைகூவல்

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), யூனிசெஃப் (UNICEF), மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு (EI) ஆகிய அமைப்புகள், அரசுகள், ஒத்துழைப்பு அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்திடம் ஒரு கூட்டுக் கடமையை வேண்டுகின்றன,

“ஆசிரியர் தொழிலில் கூட்டாண்மை ஒரு இயல்பான நடைமுறையாக இருக்க வேண்டும்” என்பது உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், அதிகாரம் உள்ள எல்லா நிலைகளிலும் உண்மையான கூட்டாண்மை இருந்தால்தான், அனைவரையும் உள்ளடக்கிய, சமநிலையுடனும் வலிமையுடனும் கூடிய ஒரு கல்வி முறைமையை உலகம் முழுவதும் கட்டியெழுப்ப முடியும்.

உலகளாவிய ஆசிரியர் தின விழா

உலக ஆசிரியர் தின உலகளாவிய விழா எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபேபா நகரில் நடைபெறும் Pan-African Conference on Teacher Education (PACTED) நிகழ்வின் ஒரு பகுதியாக. கொண்டாடப்படவிருக்கின்றது. உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), யூனிசெஃப் (UNICEF), மற்றும் சர்வதேச கல்வி அமைப்பு (EI) ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர். ஆப்ரிக்கக் கூட்டமைப்பால் நடத்தப்படும் அமைச்சர்களின் கூட்டத்தில் “தனிமையிலிருந்து கூட்டுச் சக்திக்கு: ஆசிரியர் தொழிலை கூட்டாண்மை கண்ணோட்டத்தில் மறுபரிசீலனை செய்வது எப்படி?” எனும் கருப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெபறவுள்ளது.

கூட்டாண்மை என்றால் என்ன?

அது ஒருவருடன் ஒருவர் சேர்ந்து பணிபுரியும் பழக்கமாகும். ஆசிரியர்களுக்குள் கூட்டாண்மை இருக்கிறது என்றால்:

  • அவர்கள் அறிவையும் அனுபவத்தையும் பகிர்வார்கள்.
  • மாணவர்களுக்கு சேர்ந்து கற்பிப்பார்கள்.
  • பாடசாலையின் முக்கிய முடிவுகளில் சேர்ந்து ஆலோசித்து செயல்படுவார்கள்.

இதனால் என்ன பயன்?

“கற்பித்தல் என்பது ஒரு அழகான மற்றும் மகிழ்ச்சியான தொழில். ஆனால், ஆசிரியர்கள் தனித்தனியாக அல்லாமல், ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும்போது, அதுவே ஒரு மாயம் போலவே இருக்கும்!”

அனைவருக்கும் கற்றல் வாய்ப்பு

பல வகைத் திறமைகள் மற்றும் அனுபவங்கள் உள்ள ஆசிரியர்கள் சேரும் போது, மாணவர்களுக்கு மேலும் நன்மை கிடைக்கிறது. பாடம் மட்டும் அல்லாமல், புதிய யோசனைகள், விளக்க முறைகள் எல்லாம் சேர்ந்த ஒரு சிறந்த பாடத்திட்டம் உருவாகிறது.

தனிப்பட்ட கவனம்

ஆசிரியர்கள் இணைந்து வேலை செய்யும்போது, ஒவ்வொரு மாணவரின் வலிமைகள், பலவீனங்கள் எல்லாம் தெரிந்து கொள்வது சுலபமாகிறது. அதன் மூலம், மாற்றம் செய்யப்பட்ட கற்பித்தல் நடத்த முடிகிறது.

ஆசிரியர்களுக்கே கற்றல் வாய்ப்பு

இணைந்த குழுக்களில் ஆசிரியர்கள் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்கிறார்கள். சிறந்த முறைகளைப் பகிர்கிறார்கள், புதிய யோசனைகள் தெரிந்து கொள்கிறார்கள். இது அவர்களது தொழில்முறை வளர்ச்சிக்கு உதவுகிறது.

சிக்கல்களுக்கு குழுவாக தீர்வு

மாணவர் நடத்தைப் பிரச்சனைகள் அல்லது பாடத் திட்ட மாற்றங்கள் வந்தால், குழு ஆசிரியர்கள் சேர்ந்து திறமையாக தீர்வுகள் காண்கிறார்கள்.

 நல்ல பாடசாலைச் சூழல்

ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கும்போது, பள்ளியில் நல்ல உறவு, நல்ல மனநிலை உருவாகிறது. இது மாணவர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள்

இணைந்து பணியாற்றும் ஆசிரியர்கள் சுவாரஸ்யமான, செயலில் கலந்துகொள்ளும் வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். மாணவர்களும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள்.

தொடர்ச்சியான  மேம்பாடு

இந்த குழுக்கள் தங்கள் பணியை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்து, எப்படிச் சிறப்பாக செய்யலாம் என பின்னூட்டம் பெறுகிறார்கள். இது பாடசாலை முழுவதும் நல்ல முன்னேற்றத்தை கொண்டு வருகிறது.

முடிவுரை:

ஆசிரியர் தினம் என்பது, நம் அறிவின் வழிகாட்டிகளான ஆசிரியர்களை மதிப்பதற்கும், அவர்களது பங்களிப்பை அறிதற்கும் ஒரு சிறப்பான வாய்ப்பாகும். இன்றைய கல்வி சூழ்நிலையில், ஆசிரியர்களின் தனித்திறமையை மட்டுமல்ல, கூட்டாண்மையின் சக்தியையும் அடிப்படையாக கொண்டு தொழில்முறை வளர்ச்சியை சாத்தியமாக்குவது அவசியமாகிறது.

“தனிமையிலிருந்து கூட்டுச் சக்திக்கு” எனும் புது நோக்கில், ஆசிரியர்கள் ஒருவருடன் ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், பகிர்ந்த செயல்முறைகளின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதற்கும் வழிவகுக்கும் சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயம் நம்மை நோக்கி சுவடிட்டு வருகிறது.

அதற்காக, கல்விக் கொள்கை முடிவெடுப்பாளர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் சமூகமே — அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். கல்வி என்பது ஒருவரால் மட்டும் சாத்தியமில்லை. கூட்டாண்மையின் மூலம் மட்டுமே தரமான கல்வி, மனநிறைவு மிக்க ஆசிரியர் வாழ்க்கை, மேலும் நமது சமூகத்தின் நலனும் உறுதி செய்யப்படும்.

எனவே, உலக ஆசிரியர் தினத்தின் இவ்வாண்டு கருப்பொருளை உணர்ந்து, ஒவ்வொரு பாடசாலையையும் ஒரு கூட்டாண்மையின் பெருவீட்டாக மாற்றுவதே நமது பொறுப்பாக இருக்க வேண்டும்.

“ஆசிரியர் தொழிலில் ஒளி வீசும் மாற்றம் ஒற்றை முயற்சியால் இல்லை, கூட்டாண்மையின் வழியாக மட்டுமே!”

 

Reference

Joint Message from Director-General of UNESCO, Director-General, International Labour Organization, Executive Director, UNICEF, General Secretary, Education International on the occasion of World Teachers’ Day 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *