கண்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய சம்பவம் குறித்து கண்டி பிரதேச சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கற்கும் கற்கும் இந்த மாணவர்கள், அதே பாடசாலையில் கற்பிக்கும் இளம் பெண் ஆசிரியையின் முகத்தைப் பயன்படுத்தி குறித்த புகைப்படங்களை உருவாக்கி பகிர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக அவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆசிரியருக்கு தெரிய வந்தபோது, குறித்த ஆசிரியர் கண்டி பொலிஸ் நிலையத்தில் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், கண்டி பிரிவு சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பாடசாலைக்குச் சென்று, சம்பந்தப்பட்ட மாணவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மடிக்கணினி மற்றும் இரண்டு மொபைல் போன்களைக் கைப்பற்றி விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கண்டி பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் திரு. அனுருத்த பண்டாரநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி, திருமதி பலீபன உள்ளிட்ட பொலிஸ் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
