ஆசிரியர் வருடாந்த இடமாற்றங்களை இந்த மாதத்திற்குள் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் திரு ஜோசப் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தேசிய பாடசாலை ஆசிரியர்கள் உட்பட 12000 ஆசிரியர்களுக்கு மேற்பட்டவர்கள் இடமாற்றத்தை எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாடசாலைகளின் இடமாற்றப் பட்டியல் வெளியாகியுள்ளதோடு, மாகாணப் பாடசாலைகளினதும் இடமாற்றப் பட்டியல்கள் சில வெளியாகியுள்ள பின்னணியில் அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இப்பட்டியலில் சிலர் 10 வருடங்களுக்கு அதிக சேவைக் காலத்தை ஒரே பாடசாலையில் கொண்டவர்கள் என்பதோடு, சிலர் கடந்த காலங்களில் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தும் செயன்முறையிலிருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலையீடு
கடந்த காலங்களில் இடம்பெற்ற இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டதாகவும் இவ்வருடம் அவ்வாறான எந்தத் தலையீடும் தான் மேற்காெள்ள வில்லை என்றும் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் இடமாற்ற சபைகளில் காணப்பட்ட அரசியல் தலையீடுகள் காரணமாக பிரபல பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்ற தீர்மானங்களில் இருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
