கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்பப் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு. பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.
இத் தீர்மானம் காரணமாக தற்போது சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை பாதியில் நிறுத்திய குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இக்கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
“அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இது தூர மற்றும் கஸ்டப் பிரதேசப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒரு பெரிய அநீதியாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் இந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவரத் தயாராகி வந்த போது அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களைக் காெண்ட தற்போதைய அரசாங்கம் இதைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம், குறைந்த மாணவர்களைக் கொண்ட உயர் தர வகுப்புக்களை மூடிவிட்டு, அவற்றை ஏனைய பாடசாலைகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தற்போது தயாராகி வருவதாகவும் அவர் கூறினார்.
இது சாதாரண தரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்தரம் கற்பதை நிறுத்தும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் திரு. பிரியந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
குறித்த பாடசாலைகளுக்கு ஏற்ற ஆசிரியர்களையும் வசதிகளையும் வழங்குதைத் தவிர, அவற்றை மூடுவது பொருத்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.