21ஆம் நூற்றாண்டில் கற்றல் எவ்வாறு அமைதல் வேண்டும்.
சி.லோகராஜா விரிவுரையாளர் தேசிய கல்வியியல் கல்லூரி மட்டக்களப்பு.
உலக உருண்டை பலமுறை சுற்றி வந்து பல மாற்றங்களைக் கண்டு இப்பொழுது 21 ஆம் நூற்றாண்டில் 22 ஆண்டுகளைக் கடந்து இன்னும் புதிய மாற்றங்களுக்காகக் சுற்றிக் கொண்டிருக்கிறது.
நம்மைச் சுற்றி பிரமாண்ட புறவய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கிராமத்தில் வாழ்ந்த மக்கள் எல்லாம் மெல்ல நகரவாசிகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடையே உள்ள நவீன வசதி வாய்ப்புகளின் இடைவெளி வெகுவாகக் குறைந்து வருகிறது. நகரத்தின் வசதிகள் எல்லாம் கிராமப்பகுதிகளுக்கும் ஊடுருவி வருகிறது.
மருத்துவம், வீதிப் போக்குவரத்து, கல்வி, இணையம் தொடர்பாடல் தொழில்நுட்பம், இன்னும் பல வசதிகளின் பெருக்கத்தால் உலகமயமாக்கமும் உருமாற்றமும் விரைந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
புதிய நம்பிக்கைகள், புதிய வாழ்க்கைமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள், புதிய உணவுப் பழக்கவழக்கங்கள், புதிய இயல்புகள், மரபுமீறல்கள் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதை நாம் “கலி காலம்” என்று பகிடி பண்ணினாலும் மாற்றங்கள் என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் கல்வியின் நோக்கம் என்பது இந்த இருபத்தோராம் நூற்றாண்டு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றத்திற்கும் சவாலுக்கும் ஏற்றவாறு மனித சமூகத்திற்குத் திறன்களை வழங்குவதாக இருக்க வேண்டும். அந்தத் திறன்களைக் கொண்டுதான் வயிற்றுப் பசிக்கு உணவுதரும் வேலையையும் தேடிக் கொள்ள வேண்டியுள்ளது. திறன்களை வழங்காத ஏட்டுப்படிப்பை கறிக்கு உதவாத சுரைக்காய். என்றே கருதவேண்டி உள்ளது.
21 நூற்றாண்டுக்குரிய திறன்களா? அவை யாவை? என்ற வினாக்கள் 21 நூற்றாண்டில் 22 ஆண்டுகள் கழித்தும் எம்மத்தியில் எழாமல் இல்லை. இக்காலத்தில் இன்னொரு தனி மனிதனை விடவும் சிறந்து விளங்க இந்தத் திறன்களே அடிப்படையாக விளங்குகின்றன.
நான்கு முக்கியத் திறன்கள் 21 ஆம் நூற்றாண்டில் வாழும் ஒருவர் பெற்றிருத்தல் வேண்டும்.
21ம் நூற்றாண்டு 4 C திறன்கள் பின்வருமாறு,
- தொடர்பாடல் திறன் (Communication skills)
- கூட்டுப்பணித் திறன் (collaboration skills)
- பகுத்தறியும் சிந்தனைத் திறன் (Critical thinking skills)
- ஆக்கச் சிந்தனைத் திறன் (Creative thinking skills)
இத் திறன்களில் முதல் இரண்டும் வாழ்வியல் திறன்கள் மற்ற இரண்டும் உயர்ச்சிந்தனைத் திறன்கள். இந்தத் திறன்களை வழக்கத்திற்கு கொண்டுவந்து கலாசாரமாக மாற்ற கல்வியின் உதவி தேவைப்படுகிறது. முதலில் வாழ்வியல் திறன்களை நோக்கவோம்.
1.தொடர்பாடல் திறன் (Communication skills)
பல்வேறு வகையில் மொழியையும் தொடர்புக் கருவிகளையும் கொண்டு சொல்லவந்த செய்தியைப் பரப்பி தன் நோக்கத்தை அடைந்துவிட தேவைப்படும் திறந்தான் தொடர்பாடல் திறன் தொடர்பாடல் திறனை பேச்சு, எழுத்து, வரைபடங்கள், குறிவரைவுகள், உடல்மொழியைக் (சைகை) கொண்டு வெளிப்படுத்தலாம். இதற்கு உதவ கணினி, இணையம், மின்னியல் கருவிகள், மின்னியல் எழுதுகோல்கள் என பல வந்துவிட்டன. மாணவர்களுக்கு இவற்றை அறிமுகம் செய்ய வேண்டும்.
ஒரு கருத்தை விளக்க காணொளிகள் தயார் செய்யச் சொல்வது, அதை பரவலாக்க பல தொழில்நுட்பக் கருவிகளைப் பயன் படுத்தும் திறன்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். கணினி மொழியும் கற்றுத்தரலாம். ஆகவே, தொடர்பாடலுக்கு உதவும் கருவியாகத் தொழில்நுடப்பத் திறனைக் காணவேண்டும்.
தொடர்பாடல் திறனுக்கு மொழி மிக அவசியமாகிறது. அந்த வகையில் கணினி மொழியும் (C++Coding) இன்றைய மாணவர்களுக்கு ஓர் அவசியத் தேவை. சில மாணவர்கள் மொழிப்புலமை மிக்கவர்களாக இருப்பதன் காரணத்தை ஆராயப்புகுந்தால் அது அவர்களின் இயல்பான தனித்திறன் என்றே விடை வருகிறது.
சில மாணவர்கள் மொழிகளை விரைவாக கற்றுக்கொண்டு புலமை பெறுகிறார்கள். அவர்களுக்கும் மொழித் தொடர்பான வேலை வாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன. ஆனால் அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டின் தேவையாகவும் இருக்கின்றது. எனவே, மொழியை விரும்பும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பலமொழிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வமூட்ட வேண்டும். தாய்மொழி, இரண்டாம் மொழி, ஆங்கிலம், சீனம், பிரஞ்சு, ஜெர்மானியம் போன்ற உலக மொழிகளில் புலமை பெற்றிருந்தால் வெளிநாடுகளில் மாத்திரமன்றி உள்நாட்டிலும் சுற்றுலாக் கைத்தொழில் துறையில் வேலைவாய்ப்புகள் அவர்களின் வீட்டு வாசல் கதவைத் தட்டும். கூடவே தொடர்பாடலில் ஈடுபடும்போது, பணிவும், பண்பும் வெளிப்படக் கடைபிடித்தால் கூடுதல் நலம்பயக்கும்.
தொடர்பாடல் என்பது பேச்சு, எழுத்து வழியாகவே பெரும்பாலும் நடந்து வருகிறது. பேச்சு, எழுத்து இரண்டிலும் இருக்கும் செய்தியைக் கடத்த கணினி -இணைய தொழில் நுட்பக்கருவிகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. 21 ஆம் நூற்றாண்டின் மாணவர்கள் இந்தத் திறனையும் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரிட்சைகளில் இத்தகைய வெளிநாட்டு மொழிகளுக்குச் சந்தர்பம் காணப்பட்டாலும் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் அத்தகைய மொழிகளை மாணவர்கள் கற்பதற்கு வாய்புக் காணப்படுகின்றதா? அதற்குப் பொருத்தமான ஆசிரியர்கள் உள்ளனரா? என்றால் விடை இல்லை என்றே வருகின்றது. மேல் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் சில பிரபல்ய பாடசாலைகளில் அத்தகைய வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அத்தகைய பாடசாலைகளை நாம் பாராட்டியே ஆக வேண்டும். மேலும் (coding and programming) போன்ற கணினி மொழிகள் இன்றைய மாணவர்களுக்கு மிக மிக அத்தியாவசியம். எனவே பாடசாலைகளில் இவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- கூட்டுப்பணித் திறன் (collaboration skills)
ஒரே நோக்கதையே உணர்ந்து இணைந்து மற்றவரோடு பணிப்புரியும் திறன். இந்தத் திறன் பல்வேறு சூழலுக்குத் தேவையான திறன். ஒற்றுமையாக வாழ்வதற்கும் எதிர்வரும் பிரச்சனையை ஒன்றுபட்டு தீர்ப்பதற்கும் இந்தக் கூட்டுப்பணித் திறனே அடிப்படை. கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒத்து வேலை செய்தால்தான் ஒரு சமூகத்தின் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியும். அதை பாடசாலையிலிருந்து வளர்த்தெடுக்க வேண்டும். இவை வாழ்க்கைக்குத் தேவையான திறன்கள். ஆகவே தங்களின் நுண்ணுணர்வு ஆற்றலை (Emotional intelligence) இவ்விடத்தில் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் தர்க்கம் ஏற்பட்டு குழப்பம் விளைந்து பிளவு உண்டாகும். தனிமனித பகையைப் பொருட்படுத்தாமல் குழு கொண்ட நோக்கத்திற்காகப் பணிசெய்யும் ஒற்றுமை கூட்டுப்பணியால் விளையும்.
என்னதான் தனித்திறன் பெற்றிருந்தாலும் ஊரோடு ஒத்துவாழ வேண்டும். அதற்கு பிறரின் ஒத்துழைப்பு (collaboration) வேண்டும். பிறரோடு ஒத்தியங்கவும் வேண்டும் (cooperation). எனவே, மாணவர்களைக் கூட்டுமுயற்சி, கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபடுத்தத் தக்க வகையில் செயற்பாடுகளை வடிவமைக்க வேண்டும். வேறு நாடுகளில் வாழும் மாணவர்களோடு தொடர்பாடவும் கூட்டுப்பணியிலும் கூட்டுத்திட்டங்களை வகுத்து செயற்படுத்தவும் மாணவருக்குத் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். இதை ஓர் அடைவுக்குறியீடாகக் Key performance index (KPI) கொள்ள வேண்டும்.
இன்றிருக்கும் இணைய வசதிகள் இதை கண்டிப்பாகச் சாத்தியமாக்கும். உலகம் என்பது ஒரு வீடு. அதில் எல்லோரும் கூட்டுக்குடித்தனம் நடத்துகின்றோம். ஒத்துழைப்பும் ஒத்தியங்குதலும் மட்டுமே உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். கூட்டுப்பணியில் ஈடுபடும்போது கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றும். எனவே முரண்பாடுகள் களையவும் அல்லது முரண்களும் வேறுபாடுகளும் இயல்பே என்பதை உணர்த்தி மனித அன்பை வளர்க்கவும் மதிக்கவும் ஒத்துழைப்புக் கல்வியைக் கலாசாரமாக்கும் வித்தையை ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.
கூட்டாக செயல்படுதல்
கூட்டாக முடிவெடுத்தல்
கூட்டாக வெற்றி பெறுதல்
இன்றைய இலங்கையர்களுக்குத் தேவைப்படுகின்ற சமூகத் திறன்களில் மிக முக்கியமானவை. இவற்றைப் பாடசாலைகளிலேதான் வளர்த்தெடுக்க முடியும்.
அடுத்து உயர்ச்சிந்தனைத் திறன்களான பகுத்தறிவுத் திறன், ஆக்கத் திறன் ஆகிய இரண்டும் அறிவார்ந்த செயல்பாட்டுக்கும், உண்மையைக் கண்டுபிடிக்கவும், புதியன உருவாக்கவும், பிரச்சனையைத் தீர்க்கவும் உதவும் சிந்தனைத் திறன்கள் ஆகும்.
- பகுத்தறியும் சிந்தனைத் திறன் (Critical thinking/ reasoning)
21 ஆம் நூற்றாண்டில் தகவலுக்குப் பஞ்சமில்லை. கைவிரலிடுக்கில் கைப்பேசியில் கணினியில் காட்சிக்கு உண்டு பல்லாயிரம் தகவல்கள். அவற்றில் எது உண்மை எது பயன் மிக்கது என முடிவெடுக்கும் சாதுரியம் பயன்பட பகுத்தறியும் சிந்தனை வேண்டும். பகுத்தாய்ந்தும் பார்க்க வேண்டும். ஆரம்பப் பாடசாலைகளில் கதைகள் சொல்வதன் மூலம் பகுத்தறிந்து முடிவெடுக்கும் வாய்ப்புக்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
கேள்விகள் எழுப்புவது பகுத்தறிவுச் சிந்தனையின் வெளிப்பாடு. ‘ஏன்’ ‘எதற்கு’ எனும் கேள்விகள் பகுத்தறிவை வளர்த்தெடுக்கும். இதுவே அறிவியல் சிந்தனைக்கு அடிப்படை. எந்தப் பாடங்களை, பாடநெறிகளை அல்லது எந்த துறைகளைத் தேர்தெடுத்துப் படித்தால் வேலை வாய்ப்பு அதிகம், போட்டிகள் குறைவு என்பதை ஆய்ந்து அறிந்து பின் முடிவெடுக்கப் பகுத்தறியும் சிந்தனை வேண்டும். இது சிரேஸ்ட இடைநிலை வகுப்பு மாணவரிடம் கேட்க வேண்டிய பகுத்தறிவுக் கேள்விகள்.
பாடம் தொடர்புடையக் கேள்விகள் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கூட பகுத்தறியும் சிந்தனையைத் தூண்டும். உதாரணமாக, ஏன் முடி நரைக்கிறது.? காரணங்கள் என்ன? இந்தக் காரணங்களைக் கண்டுபிடித்து அந்த காரணங்களைத் தீர்ப்பதன் மூலம் முடி நரைப்பதைத் தடுக்க மருந்து கண்டுபிடிக்க முடியும்.
ஆகவே பகுத்தறிவுச் சிந்தனையின் அருமை கருதி அதை வளர்த்தெடுக்கப் பாடசாலைகளில் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.
- ‘ஏன்’ (Why) வகை கேள்விகள் கேட்பது
- சிந்தனை வரைபடம் (Thinking maps)
- என்னுடைய மற்றும் நம்முடைய (Mine and Combine ) எனும் கருவியைக் கொண்டு பிறரின் கருத்தறிந்து, பின் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்க மாணவரைப் பழக்குதல்
- Force field analysis, gap analysis, need analysis போன்ற கருவிகள் கூட தரவுகளின் அடிப்படையில் பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் திறனை வலுப்படுத்தும்.
ஆசிரியர்கள் பலவகையான பகுத்தறிவுச் சிந்தனை நுட்பங்களை மாணவருக்கு அறிமுகப்படுத்தி அதைப் பயன்படுத்தப் பழக்கப்படுத்தி வந்தால், இக்கட்டான சூழலில் மாணவர்கள் பதறாமலும், பூவா தலையா போட்டுப் பார்க்காமலும் அறிவார்ந்து முடிவுகள் எடுக்கும் திறமை வளரும்.
- ஆக்கச் சிந்தனைத் திறன் (Creative thinking)
ஆக்கச் சிந்தனை என்பது புத்தாக்கம் படைப்பதற்குத் தேவையான ஓர் அடிப்படை சிந்தனை. ஒருவரின் கற்பனை வளம் அவரின் ஆக்கச்சிந்தனையைக் வெளிப்படுத்திக் காட்டுகிறது என்கின்றார்கள். ஆனாலும் ஆக்கச் சிந்தனை நல்ல விளைபயனை தரவேண்டும். இல்லையெனில் அந்த ஆக்கத்தால் பயனேதுமில்லை.
பொதுவாக எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள் எல்லாம் கற்பனை மிகுந்தவர்கள். அதனால்தான் அவர்களால் சுவைமிகுந்த படைப்புக்களைத் தரமுடிகிறது.
பாடசாலை மாணவர்கள், நோபல் பரிசுக்கு தகுதி பெறுகிற அளவிற்கு உலகமே வியக்கும் புதுமை அல்லது புத்தாக்கத்தை உருவாக்க முடியா விட்டாலும் (Big- Creativity, Big-C) சிறிய வகை புத்தாக்கம் செய்யவாவது பழக்கலாம்.
உண்மையில் மாணவர்களும் அந்தளவுக்கு ஆற்றல் உள்ளவர்கள்தான். ஒரு கட்டத்தில் அந்தத் திறமை வெடித்துக் கிளம்ப, பாடசாலைப் பருவத்திலே அவர்களை Mini- Creativity, Little- Creativity சிறிய புத்தாக்கங்களைச் செய்யப் பழக்க வேண்டும். அவர்கள் நூல் ஏட்டில் உள்ளதை உள்வாங்கி மனப்பாடம் பண்ணி அப்படியே பரீட்சையில் ஒப்புவித்து புள்ளிகளைப் பெறுவது மட்டும் போதாது. புதுமை, புத்தாக்கம் படைக்கும் ஆர்வத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.
21ஆம் நூற்றாண்டின் மனித வளம், தொழிற்துறைகள் எல்லாம் ஆக்கச் சிந்தனை மிகுந்தவர்களைச் சார்ந்து இருக்கிறது. இனி புத்தாக்கம் நிறைந்த கண்டுபிடிப்புகளைத் தருவோர் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆளுமைகளாகக் கொண்டாடப்படுவர். புதிய கண்டுபிடிப்புகள் சிக்கல்களுக்கு புதுத் தீர்வுகளைக் கொடுக்க வேண்டும்.
இருபத்தோராம் நூற்றாண்டுக் கல்வி மேலே குறிப்பிடப்பட்டத் திறன்களை வளர்த்தெடுக்க வேண்டும். மாணவர்கள் பல விடயங்களைத் தெரிந்தும் புரிந்தும் வைத்திருக்க வேண்டும் அதை விட அதைப் பயன்படுத்தவும் வேண்டும். இல்லையேல் கல்வியால் பயனில்லை.
“கற்க கசடற கற்பவைக் கற்றபின் நிற்க அதற்குத் தக”