தத்துவம் வழிநடத்தும் கல்வி : சிந்தனையும் செயலும் இணையும் பயணம்
“Philosophy-Guided Education: A Journey of Integrating Thought and Action”.
Mr. S. Logarajah, SLTES,
Lecturer ,
Batticaloa National College of Education.
அறிமுகம் :
“Education is the dynamic side of philosophy.” — J.S. Ross
கல்வி என்பது தத்துவத்தின் செயல்பாட்டு வடிவம் –
இந்த கட்டுரை ஆசிரியர்களுக்கு தத்துவம் மற்றும் கல்விக்கு இடையிலான ஆழமான தொடர்பை புரிந்துகொள்ளவும், அதை ஆசிரியராக தன் கற்பித்தல் நடைமுறையில் பயன்படுத்தவும் வழிகாட்டுகிறது.
இதனூடாக அவர்கள்,
- கல்வி மற்றும் தத்துவத்தின் அடிப்படை கருத்துக்களை விளக்க முடியும்.
- கல்வித் தத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும்.
- ஆசிரியர் தன் கற்பித்தலில் தத்துவத்தின் தாக்கத்தை ஆராய்து நடைமுறைப்படுத்த முடியும்.
- கல்வி–தத்துவம் இடையிலான உறவை எடுத்துக்காட்டங்களுடன் விளக்க முடியும்.
தத்துவம் மற்றும் கல்வி அறிமுகம்
தத்துவம் என்றால் என்ன?
சொல்லியல் விளக்கம் (Etymological meaning)
தத்துவம் (Philosophy) என்ற சொல் இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து உருவானது:
philos (பிலொஸ்) – அன்பு / விருப்பம் / வேட்கை
Sophia (சோபியா) – அறிவு / ஞானம்
ஆகவே “Philosophy” என்றால் அறிவின் மீது அன்பு அல்லது அறிவு வேட்கை (Love of Wisdom) என்று பொருள்படும். இன்றைய பரந்த பொருளில், தத்துவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை நோக்கம், நம்பிக்கைகள், சிந்தனை முறை, உலகக் கண்ணோட்டம் ஆகியவற்றின் தொகுப்பாகவும் பார்க்கப்படுகிறது.
“தத்துவம் என்பது உண்மையைத் தேடும் ஒரு பயணம். வாழ்க்கையின் அர்த்தத்தையும் மதிப்பையும் கண்டறிய மனித மனம் மேற்கொள்ளும் ஆன்மிகச் சஞ்சாரம் ஆகும்.”
டைட்டஸ் (Titus, 1964) – தத்துவத்தின் ஐந்து பரிமாணங்கள்
அமெரிக்க தத்துவஞானி டைட்டஸ் (Harold H. Titus) 1964 இல் தத்துவத்தின் பொருளை ஐந்து பரிமாணங்களாக விளக்கியுள்ளார்:
- தனிப்பட்ட கண்ணோட்டம்: உலகமும் மனித வாழ்க்கையும் பற்றிய ஒருவரது சொந்த பார்வை.
- பகுத்தறிவு சிந்தனை: எதையும் ஆழ்ந்து ஆராய்ந்து, பொதுவான கொள்கைகளா அமைத்தல்.
- முழுமைப் புரிதல்: பொருளின் முழுமை (wholeness) பற்றி அறிந்து கொள்ள முயற்சிதல்.
- மொழி மற்றும் தர்க்க ஆய்வு: சொற்களின் பொருளை தர்க்க ரீதியாக ஆய்வு செய்து, உண்மையை விளக்குதல்.
- பிரச்சினை தீர்வு: அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்கும் கொள்கைகள் தொகுப்பு.
“தத்துவம் என்பது சிந்திக்கும், கேள்வி கேட்கும், காரணம் தேடும், உண்மை அறியும் முயற்சி”
தத்துவத்தை புரிந்து கொள்ளும் மூன்று நிலைகள்
01 சொற்பொருளின் ஊடாக தத்துவத்தைப் புரிந்துகொள்ளல்.
“தத்துவம்” என்பது இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து வந்தது: philos (பிலோஸ்) – அன்பு, விருப்பம், வேட்கை. Sophia (சோபியா) – அறிவு, ஞானம். அதனால், தத்துவம் = அறிவை நாடும் அன்பு அல்லது அறிவின் மீது உள்ள வேட்கை என பொருள் பெறுகிறது.
விளக்கம்:
தத்துவம் என்பது வெறும் புத்தக அறிவைத் தேடுவது அல்ல அது உண்மையை அறிய, வாழ்க்கையின் அர்த்தத்தையும் பெறுமானங்களையும் புரிந்து கொள்ள, மனதால் சிந்திக்கும் ஆழமான முயற்சி ஆகும்.
மனிதன் “நான் யார்?”, “இந்த உலகம் எதற்காக?”, “வாழ்க்கையின் அர்த்தம் என்ன?” போன்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைத் தேடும் அறிவு ஆர்வமே தத்துவத்தின் ஆரம்பம்.
அறிவை நாடும் வேட்கை என்ற கருத்து இங்கு மிக முக்கியமானது: வேட்கை இல்லாமல் அறிவை அடைய முடியாது. அறிவை அடைந்தாலும் அதைப் பயன்படுத்தும் நோக்கம் அன்பின்மையால் வீணாகும்.
எளிய எடுத்துக்காட்டு:
ஒரு ஆசிரியர் தொடர்ந்து “என் மாணவர்களை எப்படி சிறப்பாகச் கற்கச் செய்யலாம்?” என்று சிந்திப்பது தத்துவப் பாவனையாகும். அவர் கற்றல் பற்றிய உண்மையான அறிவை நாடுகிறார். இது தத்துவம் = அறிவை நாடும் வேட்கை. என்பதற்கான நிஜவாழ்க்கை எடுத்தக்காட்டு.
தத்துவம் அது “அறிவைப் பெறுவது” மட்டுமல்ல, “அறிவின் அர்த்தத்தையும் பயனையும்” உணர முயலும் ஆழ்ந்த சிந்தனை முயற்சியாகும்.
02 வாழ்வியல் கண்ணோட்டமமாக தத்துவத்தைப் புரிந்துகொள்ளல்.
வாழ்வியல் கண்ணோட்டத்தில் தத்துவம் என்பது வாழ்க்கையை வழிநடத்தும் அடிப்படை சிந்தனை முறை ஆகும். அது வெறும் கோட்பாடு அல்லது புத்தக அறிவு மட்டுமல்ல, ஒரு நபரின் நம்பிக்கைகள், மதிப்புகள், நோக்கங்கள், மற்றும் செயல்பாடுகள் அனைத்திலும் வெளிப்படும். அதாவது, எவ்வாறு சிந்திக்க வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டி ஆகும்.
முக்கிய அம்சங்கள்
- வாழ்க்கை நோக்கம்: ஒருவர் வாழ்வில் எதை அடைய விரும்புகிறார், என்ன முக்கியம் என்று நிர்ணயிக்கிறது.
- நம்பிக்கைகள் (Beliefs): மனிதன் எப்படி செயல்பட வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்பதற்கான மனநிலை.
- பெறுமானங்கள் (Values): நல்லது/தீயது, நெறிமுறை, ஒழுக்கம் போன்ற மதிப்புரைகள் வாழ்க்கையில் வழிகாட்டும்.
- நடைமுறைகள் (Practices): நம்பிக்கைகளையும் மதிப்புகளையும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் செயல்கள்.
தத்துவம் வாழ்க்கையில் உருவாக்கும் தாக்கம்
- நமது சிந்தனை முறை
- நமது நடத்தை மற்றும் செயல் முறைகள்
- நமது முடிவெடுக்கும் நடைமுறை
இவை அனைத்தும் நமது தத்துவம் மூலம் பாதிக்கப்படுகின்றன.
எளிய எடுத்துக்காட்டு:
ஒரு ஆசிரியர் “மாணவர்கள் எல்லோரும் கற்றுக் கொள்ளும் திறன் உடையவர்கள்”என்று நம்பினால், அவர் ஒவ்வொரு மாணவருக்கும் சிந்தனை மற்றும் செயல்பாடு வாய்ப்புகளை வழங்குவார். வகுப்பில் ஒவ்வொருவரையும் சகபாடி பயிற்சி, செயல்முறைப் பயிற்சி, குழு செயல்பாடு மூலம் கற்றுக்கொள்ள ஊக்குவிப்பார். இந்த நம்பிக்கை தான் அவரது கல்வித் தத்துவம் (Educational Philosophy) ஆகும்.
வாழ்வியல் கண்ணோட்டத்தில் தத்துவம் = வாழ்வின் வழிகாட்டி.
அது நமது நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, நமது வாழ்க்கையை தார்க்கபூர்வமாக, அர்த்த முள்ளதாக நடத்த உதவுகிறது.
03 தத்துவஞானிகளின் கோட்பாடுகள் மூலம் தத்துவத்தைப் புரிதல் :
தத்துவம் என்றால் வெறும் கருத்துக்கள் அல்ல — மனிதனின் வாழ்வையும் கல்வியையும் வழிநடத்தும் ஆழமான சிந்தனை. பல்வேறு தத்துவஞானிகள் தங்கள் காலத்தின் சமூகநிலை, மனித அனுபவம், மற்றும் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தத்துவக் கோட்பாடுகளை உருவாக்கினர். அவற்றின் மூலம் நாம் தத்துவத்தின் உண்மை நோக்கம் மற்றும் கல்வியுடன் அதன் உறவை புரிந்து கொள்ள முடிகிறது.
பிளேட்டோ (Plato)
“கல்வி என்பது ஆன்மாவை வெளிச்சம் பெறச் செய்வது”
விளக்கம்:
பிளேட்டோவின் பார்வையில் கல்வி என்பது வெறும் அறிவு கொடுப்பது அல்ல, மனிதனின் உள்ளார்ந்த ஆன்மாவை வெளிச்சம் பெறச் செய்து, அறிவும் நற்குணமும் கொண்ட ஒரு நல்ல மனிதனாக மாற்றும் செயலாகும். அவர் எழுதிய “The Republic” என்ற நூலில் கல்வி நியாயமான சமுதாயத்தை உருவாக்கும் முக்கிய கருவி என கூறுகிறார்.
அரிஸ்டாட்டில் (Aristotle)
“அறிவைச் செயலாக்கம் செய்வதே நன்மை”
விளக்கம்:
அரிஸ்டாட்டில் கல்வியை நடைமுறை வாழ்க்கையுடன் இணைத்தார். அவரின் கருத்துப்படி, கல்வி என்பது அறிவை அறிதல் மட்டுமல்ல, அதை செயலில் பயன்படுத்தி நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு செயலாகும். அவர் கல்வியை மனிதன் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் பாதையாகக் கண்டார்.
இம்மனுவேல் கான்ட் (Immanuel Kant)
“கல்வி என்பது நெறிமுறையுள்ள மற்றும் நியாயமான மனிதரை உருவாக்குவது”
விளக்கம்:
காந்தின் பார்வையில் கல்வி மனிதனை தன்னிச்சையாகச் சிந்திக்கக் கூடியவனாகவும், மதிப்புகள் மற்றும் நெறிகளால் வழிநடத்தப் படுபவனாகவும் உருவாக்குகிறது. அவரது கருத்துப்படி “மனிதன் கல்வி மூலம் மட்டுமே மனிதனாகிறார்.”
ஜான் டூயி (John Dewey)
“கல்வி என்பது வாழ்க்கைதான்; வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல”
விளக்கம்:
டூயி கல்வியை அனுபவத்தின் அடிப்படையில் கற்றல் எனக் கண்டார். அவரின் கருத்துப்படி, மாணவர் செயலில் ஈடுபட்டு கற்றுக் கொள்ளும்போது தான் உண்மையான அறிவு பெறுகிறார். கல்வி பாடசாலையிலேயே அல்ல, ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் நடக்கிறது. அவரது தத்துவம் Progressive Education எனப்படும் நவீன கல்வி இயக்கத்திற்கான அடிப்படை.
தத்துவஞானிகளின் கோட்பாடுகள் நமக்கு கல்வியின் நோக்கம், முறைகள், மற்றும் மதிப்புகளை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. அவர்கள் காட்டிய பாதையில் தான் இன்றைய கல்வி திசை பெறுகிறது.
| தத்துவஞானி | கல்வி குறித்த கருத்து | முக்கிய நோக்கம் |
| பிளேட்டோ | ஆன்மாவை வெளிச்சம் பெறச் செய்கிறது | நற்குண வளர்ச்சி |
| அரிஸ்டாட்டில் | அறிவைச் செயலில் கையாளல் | நற்பண்பு வளர்ச்சி |
| இம்மனுவேல் கான்ட் | நெறிமுறையும் நியாயமும் வளர்த்தல் | ஒழுக்கமிக்க மனிதன் உருவாக்கம் |
| ஜான் டூயி கல்வி | வாழ்க்கையின் பகுதி | அனுபவத்தின் மூலம் கற்றல் |
கல்வி என்றால் என்ன?
கல்வி என்பது: ஒரு நபரின் அறிவு, திறன், மதிப்புகள், பண்புகளை வளர்க்கும் செயல். மனிதனை முன்னேற்றம், சமூக செழிப்பு, நல்ல பண்புகளை கற்றுக்கொள்ள வழிநடத்தும் வழிமுறை.
சுருக்கமாக: கல்வி = அறிவு + அனுபவம் + ஒழுக்கம்/ மனப்பாங்கு
உதாரணம்:
- ஒரு மாணவர் புத்தகத்திலிருந்து அறிவை கற்றுக்கொள்கிறான் (அறிவு)
- கலை, விளையாட்டு, ஆராய்ச்சி மூலம் திறன் மேம்படுகிறது (திறன்)
- ஒழுக்கப் பாடங்கள், நட்பு மற்றும் சமூகபண்புகள் கற்றுக் கொள்கிறது (ஒழுக்கம்/மனப்பாங்கு)
இதுவே கல்வியின் முழுமையான வளர்ச்சி.
கல்வி வரைவிலக்கணங்கள்
- “கல்வி என்பது ஒரு மனிதனின் உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக சக்திகளை இடையறாது விருத்தி செய்யும் செயன்முறை.” – தனேஜா
- “கல்வி என்பது அனுபவங்களை ஒழுங்கமைப்பதும் மறுசீரமைப்பதுமாகும்.” – ஜோன் டூயி
- “நல்ல மனிதர்களை உருவாக்குவதும் அவர்களை நல்ல வழிகளில் செயலாற்றச் பழக்கவழக்கப்படுத்துவதுமே கல்வி.” – பிளேட்டோ
கல்வியின் முக்கிய அம்சங்கள் (Key Features of Education)
- அறிவு வளர்ச்சி : (Intellectual Development)
புதிய தகவல்கள், ஆராய்ச்சி, சிந்தனை திறன் வளர்த்தல்.
- உடல் வளர்ச்சி : (Physical Development):
உடற்பயிற்சி, ஆரோக்கியம், சுறுசுறுப்பு.
- உளநிலை வளர்ச்சி : (Emotional Development)
மாணவர்களின் உணர்ச்சி, பொறுப்பு, ஒத்துழைப்பு திறன்களை மேம்படுத்துதல்.
- சமூக வளர்ச்சி : (Social Development)
சமூகச் சட்டம், ஒழுக்கம், பொதுநல கற்றல்.
- திறன் வளர்ச்சி : (Skill Development)
கலை, தொழில், தொழில்நுட்பம், செயல்திறன்
கல்வி தொடர்பான புதிய வரைவிலக்கணங்கள்
- யுனெஸ்கோ அறிக்கை (UNESCO Report)
வாழக் கற்றலே கல்வி ஆகும் – எட்கார் போரே
விளக்கம்: வாழ்க்கைக்குப் பொருந்தாத பயனற்ற கருத்துகளை மனதில் வைப்பது போல் அல்ல, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றைத் திரட்டிக் கொள்வதற்கான செயல் கல்வி.
- ஜெக்ஸ் டெலோ சர்வதேச ஆணைக்குழுவின் அறிக்கை
(Delors Report, UNESCO)
கல்வி = அறிவு, திறன், மனப்பாங்கை விரிவுபடுத்தி, சிக்கலான உலகில் வாழ்வதற்கான ஆற்றலை வழங்கும் செயல்முறை.
கல்வியின் நான்கு தூண்கள் (Four Pillars of Education):
- அறிவதற்காகக் கற்றல் (Learning to Know)
அறிவு, தகவல் சேகரிப்பு, சிந்தனை திறன் வளர்ச்சி
- ஆற்றவதற்காகக் கற்றல் (Learning to Do)
திறன், தொழில், கலை, செயல்திறன் வளர்ச்சி
- இணைந்து வாழுவதற்காகக் கற்றல் (Learning to Live Together)
ஒத்துழைப்பு, சமூகவியல், அன்பு, பரஸ்பர புரிதல்
- நிலைத்திருப்பதற்காகக் கற்றல் (Learning to Be)
தனிப்பட்ட வளர்ச்சி, மதிப்புகள், சுயநிலை, மனப்பாங்கு
கல்வி தொடர்பான பொதுவான அம்சங்கள் (Common Features of Education)
- அறிவு, திறன், மனப்பாங்கைக் கொண்டது
- வாழ்நாள் நீடித்த செயற்பாடு (Lifelong Process)
- தொடர்ந்தேச்சியான செயற்பாடு (Continuous Process)
- கற்றல் – கற்பித்தல் இரண்டையும் உள்ளடக்கியது
- நபரொருவரில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடு
- சமூகப் பெறுமானங்களை சந்ததி சந்ததியாகக் கையளிக்கும் செயற்பாடு
கல்வி மனிதரை முழுமையாக வளர்க்கும், அறிவையும் திறனையும் மனப்பாங்கையும் வளர்ப்பதற்கான தொடர்ச்சியான செயல். புதிய வரைவிலக்கணங்கள் சமகால உலகின் தேவைகளுக்கு ஏற்ப அறிவியல் மற்றும் மனவளர்ச்சியை ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை முன்மொழிகின்றன
கல்வியும் தத்துவமும்
- கல்வி மற்றும் தத்துவத்தின் உறவு : கல்வியும் தத்துவமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. தத்துவம் வாழ்க்கையின் இலக்குகள், விழுமியங்கள், உண்மைகள் போன்றவற்றைப் பற்றி சிந்திக்கிறது. கல்வி அந்த இலக்குகளையும் விழுமியங்களையும் நடைமுறையில் நிறைவேற்றும் கருவியாகச் செயல்படுகிறது.
சுருக்கமாக: தத்துவம் “எதை அடைய வேண்டும்?” என்பதைச் சொல்கிறது. கல்வி “அதை எவ்வாறு அடைவது?” என்பதைச் செயலில் காட்டுகிறது.
- கல்வியின் குறிக்கோள் தத்துவத்தால் தீர்மானிக்கப்படுகிறது கல்வியின் நோக்கம், அதன் திசை, அதன் அர்த்தம் ஆகிய அனைத்தும் தத்துவக் கருத்துக்களிலிருந்தே உருவாகின்றன. ஒரு சமூகத்தின் அல்லது காலத்தின் தத்துவக் கொள்கைகள் அதன் கல்விக் குறிக்கோள்களை உருவாக்குகின்றன.
உதாரணம் : பண்டைய ஏதென்ஸ் (Athens) நாட்டில் தத்துவம் தனிமனிதக் கலாசார மேம்பாட்டை வலியுறுத்தியது. அதனால் அக்கால கல்வி கலாசார வளர்ச்சி மற்றும் நற்பண்பு வளர்ப்பை நோக்கமாகக் கொண்டது.
ஸ்பெயினில் ஒரு காலத்தில் தேசபற்று மற்றும் போராட்டம் முக்கியமான தத்துவக் கொள்கையாக இருந்தது. அதனால் கல்வியின் நோக்கமும் தேசபற்றும் வீரத்தையும் வளர்த்தல் என்பதாயிற்று.
- தத்துவம் கல்விக்கு திசைநெறி காட்டுகிறது : தத்துவம் இல்லாமல் கல்வி நோக்கமற்றதாகி விடும். கல்வி எந்தவொரு திசையிலும் செல்லாமல் தடுமாறும் அபாயம் உள்ளது.
தத்துவம் கல்விக்கு “எது சரி?”, “எது பயனுள்ளதாகும்?”, “எதை அடைய வேண்டும்?” என்பவற்றை தெளிவுபடுத்துகிறது. “இயக்கம் பெறாத தத்துவம் கல்வியாக மாறும் போது உயிர்பெறுகிறது.”அதாவது, தத்துவம் சிந்தனையாக மட்டும் இருந்தால் அது நிலைவாய்ந்தது. ஆனால் கல்வி அதன் செயற்பாட்டுருவமாக மாறும் போது அது இயக்கமடைகிறது.
- கல்வித் தத்துவம் தத்துவத்தின் ஒரு கிளை : கல்வித் தத்துவம் (Educational Philosophy) என்பது: கல்வியின் குறிக்கோள்கள், கற்பித்தல் முறைகள், ஆசிரியரின் பங்கு, மாணவரின் ஒழுக்கம், கலைத்திட்டம் ஆகியவற்றை தத்துவ அடிப்படையில் ஆராய்வது. இதில் மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன (Newsom):
- கல்வித் தத்துவம் என்பது தத்துவத்தின் ஒரு கிளை.
- அது கல்வியைப் புரிந்து கொள்ளும் ஒரு பார்வை.
- அது கல்வியின் பொதுக் கோட்பாடு.
சுருக்கமாக: தத்துவம் கோட்பாட்டை அளிக்கிறது கல்வி அதனை நடைமுறைப் படுத்துகிறது.
- கலைத்திட்டம் (Curriculum) மற்றும் தத்துவம் : ஒரு கலைத்திட்டம் உருவாகுவதற்கு அடிப்படை தத்துவம்தான். ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவக் கொள்கைகள் எந்த வகை பாடங்கள், மதிப்பீடுகள், கற்பித்தல் முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றன. தத்துவமின்றி பாடத்திட்டம் உருவாக்க முடியாது என அறிஞர்கள் கூறுகின்றனர். எளிய தமிழில் கூறுவதாயின்,“தத்துவமே கல்விக் கட்டிடத்தின் அடித்தளம்; கல்வியே அதன்மேல் எழுப்பப்பட்ட மாளிகை.”
கல்வித் தத்துவத்தின் முக்கியத்துவம்
- கல்வித் தத்துவம் என்பது கல்வியின் அடித்தளம் : அது கல்விக்குத் திசை, நோக்கம், பொருள் ஆகியவற்றை அளிக்கிறது. தத்துவம் இல்லாத கல்வி நோக்கமற்றது.
- கல்விக் குறிக்கோளை நிர்ணயிக்கும் : கல்வியின் நோக்கம், இலக்கு, மதிப்புகள் தத்துவத்தின் வழியே தீர்மானிக்கப்படுகின்றன. உதா: ஜோன் டூயி “கல்வி என்பது வாழ்க்கையே வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல.”
விளக்கம்:
அமெரிக்க கல்வித் தத்துவஞானி ஜோன் டூயி (John Dewey) கூறிய இந்த வரி, கல்வியின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது. அவரின் கருத்துப்படி,
கல்வி என்பது வாழ்க்கைக்கு முன் செய்யும் தயாரிப்பு அல்ல. நாம் வாழும் ஒவ்வொரு தருணமும் கற்றலாகவே இருக்க வேண்டும். அனுபவத்தின் வழியே கற்றல் (Learning by doing) தான் உண்மையான கல்வி. அதாவது, வாழ்க்கை மற்றும் கல்வி ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. வாழ்க்கையில் நிகழும் அனுபவங்கள், சிந்தனைகள், உறவுகள் — இவையே கல்வியின் வடிவங்கள். எளிய தமிழில் கூறுவதாயின், “கல்வி என்பது அனுபவத்தின் தொடர்ச்சி; வாழ்க்கை முழுவதும் நடைபெறும் கற்றல் பயணம்”
- கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைக்கு அடித்தளம் : தத்துவம் கலைத்திட்டம், கற்பித்தல் முறை, மதிப்பீடு ஆகியவற்றை வழிநடத்துகிறது. தத்துவத்தின் வகைப்படி கல்வி முறை மாறுபடும்.
இலட்சியவாதம் – ஒழுக்கம்
பயன்பாட்டுவாதம்; – அனுபவக் கற்றல்
இயற்கைவாதம் – குழந்தை மைய கல்வி
- ஆசிரியருக்கு வழிகாட்டல் : தத்துவம் ஆசிரியரின் கற்பித்தல் நோக்கம், மாணவர் அணுகுமுறை, மதிப்பீட்டைப் பாதிக்கிறது. ஆசிரியர் தத்துவ அடிப்படையில் தனது பங்கு புரிந்துகொள்கிறார்.
- மனப்பாங்கு மற்றும் மனிதநேயம் வளர்த்தல்: தத்துவம் வாழ்க்கை மதிப்புகளை (values) விளக்கி கல்வி வழியாக அவற்றை வளர்க்கிறது.
உதா: இம்மனுவேல் கான்ட் — “நன்மை என்பது செயலில் வெளிப்படும் ஒழுக்கம்.”
- கல்விப் பிரச்சினைகளுக்குத் தீர்வு: கல்வி துறையில் எழும் பிரச்சினைகளுக்கு (மதிப்பீடு, ஒழுக்கம், பாடத்திட்டம்) தத்துவம் சிந்தனையுடன் அணுகி தீர்வு அளிக்கிறது.
- கல்வி முறைமைகளின் வளர்ச்சி: கல்வியின் வளர்ச்சிக்குத் தத்துவஞானிகளின் சிந்தனைகள் அடிப்படை.
பிளேட்டோ: ஆன்மாவின் வெளிச்சம்,
அரிஸ்டாட்டில்: அறிவின் செயற்பாடு.
டூயி: வாழ்க்கையே கல்வி.
- ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆய்வுக்கு அடிப்படை
தத்துவம் ஆசிரியரின் சிந்தனைத் திறனை வளர்க்கிறது. தத்துவம் இல்லாத ஆசிரியர் கற்பித்தல் நோக்கம் இல்லாமல் செயற்படுவார்.
- சமூக மாற்றம் மற்றும் தேசிய வளர்ச்சி
தத்துவம் கல்வியை சமூக தேவைகளுடன் இணைக்கிறது. கல்வி மூலம் சமூகம் முன்னேற்றம் பெறுகிறது.
உதா: காந்தியின் ஆதாரக் கல்வி — தொழிலும் கல்வியும் இணைந்தது.
தத்துவம் கல்விக்குத் திசை, நோக்கம், வழிகாட்டல் அளிக்கிறது. கல்வியும் தத்துவமும் பிரிக்க முடியாதவை.
| தத்துவம் | கல்வி |
| சிந்தனை | செயல் |
| இலக்கு | வழிமுறை |
| நோக்கம் | நடைமுறை |
| கோட்பாடு | செயல்பாடு |
“தத்துவம் கல்விக்குத் திசை அளிக்கிறது கல்வி தத்துவத்தை நடைமுறைப்படுத்துகிறது.
கல்வித் தத்துவம் ஏன் ஆசிரியருக்கு அவசியமானது?
கல்வித் தத்துவம் என்பது ஆசிரியரின் சிந்தனை, கற்பித்தல் நடைமுறை, மற்றும் மாணவரை அணுகும் விதம் ஆகியவற்றை வழிநடத்தும் ஒளிவிளக்காக செயல்படுகிறது.
- கற்பித்தலுக்கான திசைமுகம் அளிக்கிறது : தத்துவம் ஆசிரியருக்கு “ஏன் கற்பிக்கிறோம்?”, “எதை கற்பிக்கிறோம்?”, “எப்படிக் கற்பிக்க வேண்டும்?” என்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. இதன் மூலம் கற்பித்தல் நோக்கமும், திட்டமிடலும் தெளிவாகிறது.
- மாணவர் மையக் கற்பித்தலை ஊக்குவிக்கிறது: தத்துவம் ஆசிரியரை மாணவரின் திறன், ஆர்வம், மற்றும் அனுபவங்களை மதிக்கும் வழியில் சிந்திக்க வைக்கிறது. மாணவரின் வாழ்க்கைக்கு பொருத்தமானவாறு கற்பித்தலை வடிவமைக்க உதவுகிறது.
- விழுமியக் கல்விக்கு அடித்தளம் அமைக்கிறது : தத்துவம் ஆசிரியருக்கு நெறி, ஒழுக்கம், மற்றும் சமூகப் பொறுப்பு பற்றிய விழிப்புணர்வை அளிக்கிறது. இதன் மூலம் மாணவர்களிடம் நல்ல விழுமியங்கள் உருவாகின்றன.
- கற்பித்தல் முடிவெடுப்புகளில் வழிகாட்டுகிறது :ஆசிரியர் தினசரி பல தீர்மானங்களை எடுக்கிறார் — மதிப்பீடு, ஒழுக்கம், பாடத்திட்டம் போன்றவற்றில். தத்துவம் இந்த முடிவுகள் நியாயமானவையாக, மாணவர் நலனை மையமாகக் கொண்டவையாக இருக்க உதவுகிறது.
- தன்னிலைப் பிரதிபலிப்பை ஊக்குவிக்கிறது : தத்துவம் ஆசிரியரை “நான் ஏன் இவ்வாறு கற்பிக்கிறேன்?” என்று சிந்திக்க வைக்கிறது. இதன் மூலம் அவர் தன் நடைமுறையை மாற்றி மேம்படுத்த முடியும்.
இறுதியாக,
கல்வித் தத்துவம் என்பது ஆசிரியரின் தொழில்முறை வாழ்வின் இதயம். இது கற்பித்தலுக்குத் திசை காட்டி, மாணவரின் வளர்ச்சிக்குப் பொருள் தருகிறது. தத்துவம் இல்லாத கல்வி என்பது நோக்கமற்ற பயணம்; ஆனால் தத்துவம் சார்ந்த கல்வி மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கான பாதை ஆகிறது.
“தத்துவம் ஆசிரியரின் சிந்தனையை ஆழப்படுத்தி, கற்பித்தலை அர்த்தமிக்கதாக்குகிறது.” “தத்துவம் இல்லாத ஆசிரியர் திசையற்ற பயணியெனலாம்.” தத்துவம் ஆசிரியருக்கு கற்பித்தல் நோக்கம், பெறுமானங்கள்;, மற்றும் வழிமுறைகளை வழங்கி, அவரை உண்மையான ஆசிரியராக உருவாக்குகிறது.
உங்கள் பிரதிபலிப்பு
தலைப்பு : “என் கற்பித்தல் முறையில் தத்துவத்தின் பிரதிபலிப்பு”
“உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகள், பெறுமானங்கள் மற்றும் கல்வித் தத்துவப் புரிதல் உங்கள் கற்பித்தல் முறையில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றிப் பதிவு செய்யுங்கள்.”
Reflection Sheet
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
உதாரணம் : “என் கற்பித்தலில் மாணவர்களின் தனித்திறன்களை மதிப்பது முக்கியம் என நம்புகிறேன். ஒவ்வொரு மாணவரும் கற்கக் கூடியவர்; அவர்களின் வேகம், விருப்பம், அனுபவம் அனைத்தும் வேறுபட்டவை. எனவே நான் மாணவர் மையக் கற்பித்தல் (Student-Centered Teaching) முறையைக் கடைப்பிடிக்கிறேன்.”
reference
UNESCO Reports (1996) on Philosophy of Education – global perspective.
Hirst P. H. “Philosophy and Educational Theory”. Brit. J. Ed. Studies. XII, 1, November 1963
O’Connor D. J. An Introduction to the Philosophy of Education. London: Routledge and Kegan Paul, 1957
Scheffler I. (Ed.). Philosophy and Education. Boston: Allyn and Bacon, 1958.
